செய்திகள்

அண்ணா தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

சென்னை, ஜூன் 18–

அண்ணா தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி.-யான கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.

மேலும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் எனவும், செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்கவும், கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.