செய்திகள்

அண்ணா திமுக பொதுச்செயலாளர் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு

சென்னை, ஜூலை 28–

அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, வி.கே.சசிகலா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொது செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், கட்சி பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் வி.கே.சசிகலா சென்னை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சசிகலா மேல்முறையீடு

சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை 4 வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்க நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.