செய்திகள்

அண்ணா திமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்தவித உரிமையும் கிடையாது

சென்னை, ஜன.31–

அண்ணா திமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அண்ணா திமுக கொடி இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா, சிறைக்குச் சென்ற பின்னர் அண்ணா திமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது அண்ணா திமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சசிகலா சென்ற காரின் முகப்பில் அண்ணா திமுக கொடி இடம்பெற்றிருந்தது குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், அண்ணா திமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது, இது சட்ட விரோதமானது என்றும் அண்ணா திமுகவுக்கு உரிமை கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா ஜனவரி 27–ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *