செய்திகள்

அண்ணாவின் 54-வது நினைவு நாள்: அமைதி பேரணியாக சென்று நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

சென்னை, ஜன. 3–

பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியானது சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர் பாலு, ஜெகத்ரட்சகன், சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் கருணாநிதி நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.

இப்படை தோற்கின்

எப்படை வெல்லும்

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்!

தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!

தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *