துணைவேந்தர் ராம.கதிரேசன் தகவல்
சிதம்பரம், ஜூலை 11–
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் வேலைவாய்ப்புடன் தொடர்பு கொண்ட 20 பட்டய படிப்புகள் தொடங்க உள்ளோம் என்று துணைவேந்தர் ராம.கதிரேசன் தெரிவித்தார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மற்றும் இணையவழி கல்வி மையத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி 2024-–25ம் ஆண்டிற்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா, தொலைதூர கல்வி மைய இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்து கொண்டு முதல் விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னதாக தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் டி.சீனுவாசன் வரவேற்றார். பதிவாளர் ஆர்.சிங்காரவேலு, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ஹெச்.பாக்கியராஜ், மக்கள்- தொடர்பு அலுவலர் ஆர்.ரத்தினசம்பத் மற்றும் புல முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் துணைவேந்தர் ராம.கதிரேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2024-–25 ஆண்டிற்கான தொலைதூரக்கல்வி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு சிறிய இடைவெளிக்கு பிறகு பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவான யுஜிசி வழிகாட்டுதலுடன் மேலாண்மை கல்விக்குழு பல்கலைக்கழக சிறந்த சேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மிக அதிகமான அளவில் 127 படிப்புகளுக்கு அனுமதியளித்துள்ளது. அனுமதி அத்தியாவசியம் இல்லை என்று சொல்லக்கூடிய பட்டயம் மற்றும் சான்றிதழ் பாடப்பிரிவுகள் 86, பட்டயம் 12 பிரிவு பாடங்கள் தொலைதூரக்கல்வி வழியாக இந்த ஆண்டும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி பணியாற்ற உள்ளோம். சென்ற ஆண்டு 6518 மாணவர்களும், 23316 மாணவியர்களும், மொத்தம் 29,754 மாணவ, மாணவியர்கள் சேர்ந்து உள்ளனர். மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.