செய்திகள்

அண்ணாநகர் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட 135 அடி உயர கோபுரம்

12 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறப்பு

சென்னை, மார்ச்.21-

பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் கோபுர பூங்காவில் மூலதன நிதியின் கீழ், ரூ.97.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட கோபுரத்தினை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

மேயர் ஆர்.பிரியா தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்–ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ஆர்.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் நே.சிற்றரசு (பணிகள்), த.விசுவநாதன் (கல்வி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு–103, 3வது பிரதான சாலையில் 1968ம் ஆண்டு சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவின் உள்ளே இந்த கோபுரம் அமைக்கப்பட்டது. 2010ம் ஆண்டு பூங்காவின் உள்ளே நடைபயிற்சி செய்ய நடைபாதை, யோகா மையம், ஸ்கேட்டிங் வளாகம், குளம் பராமரிப்பு, நீர்வீழ்ச்சி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2011ம் ஆண்டு பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் கோபுரத்தின் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டு, பூங்கா மட்டும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தக் கோபுரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கோபுரத்தினை சுற்றி தடுப்பு வேலி அமைத்தல், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கோபுரப் பூங்காவில் மின்விளக்குகள் அமைத்தல், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவினை அழகுபடுத்தும் வகையில் நடைபாதை பராமரிப்பு பணி, வர்ணம் பூசுதல், குளத்தைச் சுற்றி தடுப்புவேலி சீரமைத்தல் போன்ற பணிகளும், ரூ.33.60 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், நீர்வீழ்ச்சி பராமரிப்பு பணி, பூங்காவின் நுழைவுவாயிலில் தரை அமைத்தல் மற்றும் ஓவியங்கள் வரைதல் போன்ற பணிகள் என மொத்தம் ரூ.97.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கோபுரத்தின் உட்புற நடைபாதையில் பிடிப்புத் தன்மையுடன் கூடிய தரை அமைத்தல் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *