சென்னை, நவ. 18–
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. சிறப்பு புலனாய்வு குழு தினம் தோறும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.
இதன் பேரில் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தொடர்ந்து வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை காவல்துறை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த நவம்பர் 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கின் முகாந்திரத்தில் போலீசார் வழக்கை தவறாக கையாண்டுள்ளது தெரிகிறது. இந்த விசாரணையில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. அதே நேரம் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. தமிழக காவல் துறையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்யப்பட வேண்டும். அதற்கு தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலையும், அந்த அதிகாரிகள் பற்றிய சுருக்கமான விவரங்களுடன் அடுத்த விசாரணையான நவம்பர் 18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பட்டியலில் குறைந்தது 3 பெண் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டனர். சிறப்பு புலனாய்வு குழுவில் டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர், ஐபிஎஸ் ஐமன் ஜமால், ஐபிஎஸ் பிருந்தா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். டிஐஜி சுரேஷ் குமார் தாக்கூர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்க உத்தவிடப்பட்டுள்ளது.
சிறப்பு குழு அளிக்கும் முதல் அறிக்கை அடிப்படையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய அமர்வை ஏற்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் அமர்வுக்கு முன் வாரம் ஒருமுறை விசாரணை நிலை அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமின் தாய்க்கு வழக்கு செலவாக ரூ.50,000, இதர செலவுக்காக ரூ.25,000 தமிழக அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.