சிறுகதை

அண்ணன் – ஆவடி ரமேஷ்குமார்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தாள் கௌரி.

அருகிலிருந்த மளிகை கடைக்கு போயிருந்த தோழி கவிதா திரும்பி வந்ததும் அவளிடம் கேட்டாள்.

” நீ இந்த வழியா வரும் போதும் போகும் போதும் உன்னையே உத்து உத்து பார்க்கிறான்னு அந்த மளிகை

கடைக்காரனைப் பத்தி சொல்வியே…அப்புறம் ஏன்

அவன் கடைக்கே அடிக்கடி நீ போற?”

” அந்தாளோட பார்வை சரியில்லைதான் கௌரி. எனக்கு அடுத்த மாசம்

கல்யாணம். ஒரே ஏரியாவுல இருக்கோம். அவன் என்னை தங்கச்சி மாதிரி நினைக்கனும்னு தான் அவன் கடைக்கு போறேன்”

” அவன் கடையில நீ எதுவுமே வாங்கற மாதிரி தெரியலயே”

மீண்டும் கேட்டாள் கௌரி.

“ஆமாம்.நான் எதுவும்

வாங்கறதில்லைதான். ஆனா அடிக்கடி அங்க போய்,

‘அண்ணா, நூறு ரூபாய்க்கு

சில்லறை கொடுங்க அண்ணா’ னு கேட்டு

‘ தங்கச்சி’ங்கற எண்ண விதையை அந்தாளு மனசுல

விதைச்சிட்டிருக்கேன்”

” அவன் எங்க உன்னை தங்கச்சியா நினைக்கப் போறான். அதே

பார்வை! அதே வழிசல்! கழிசடை!”

” என்ன பண்றது கௌரி.சில ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது போலிருக்கே..!”

இவர்கள் பேசுவதை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த

ஒரு பெரியவர் கவிதாவிடம் சொன்னார்.

” கண்ணு, நீங்க ரெண்டு பேரும் இந்த ஏரியாவுக்கு புதுசா குடிவந்தவங்களா? அந்த மளிகை கடைக்காரர் உன்னை தப்பா பார்த்திருக்க

வாய்ப்பில்லைம்மா.ஏன்னா, ரெண்டு வருஷத்துக்கு

முன்ன அவரோட தங்கச்சி இதே ரோட்ல ஒரு லாரியில அடிபட்டு செத்துப் போய்ட்டா.

தங்கச்சின்னா அவருக்கு உயிர். என் பக்கத்து

வீட்டுக்காரர்தான்.

அவரோட தங்கச்சி அசப்புல

உன்னை ஜெராக்ஸ் எடுத்த

மாதிரியே இருப்பா! நீ மனசார அவரை ‘ அண்ணா’ னு கூப்பிடலாம்.

தங்கமனசுக்காரர்ம்மா!”

‘ அந்த மளிகை கடைக்கார அண்ணனை கட்டாயம் தன்

திருமணத்திற்கு அழைத்து

கௌரவிக்க வேண்டும்’ என்று

மனதிற்குள் முடிவு செய்தாள் கவிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *