செய்திகள் நாடும் நடப்பும்

அணுக்கொள்கையில் மாற்றம் அவசியம்

Makkal Kural Official

தலையங்கம்


இந்தியாவின் உலகளாவிய மதிப்பும் செல்வாக்கும் தொடர்ந்து உயரும் நிலையில் இன்றைய சூழ்நிலையில் அணு ஆயுதங்களின் ஆக்கத்திலும் அகற்றத்திலும் தீவிரம் காட்டுவது அவசியமான ஒன்றாகும். இதற்கு உறுதியான முடிவுகளையும் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நாமும் அருகாமை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவையும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நிலையில் இப்பகுதியில் அணுப் போரின் அபாயம் தொடர்ந்து நிலவுகிறது.

இந்தியா மற்றும் சீனா பொறுப்புடன் அணு ஆயுதங்களை நிர்வகித்து வந்தாலும் பாகிஸ்தானின் அரசியல் பதற்ற நிலைமை மற்றும் அதன் பொருளாதாரச் சிக்கல்கள் அடுத்தடுத்த சந்தர்ப்பங்கள் அந்நாட்டை பல புதுப்புதுச் சிக்கல்களில் மாட்டித் தவிக்கவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு இளைஞர்களும் மதவாதிகளும் எளிதில் பிறர் சொல்பேச்சு கேட்டு தலையாட்டி பொம்மைகளாய் மாறும் அபாயம் இருப்பதை உலக நாடுகள் அச்சத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தீவரவாதக் கும்பல்களிடம் அல்லது தடம் புரண்ட ராணுவ அதிகாரிகளின் கையிலோ கிடைத்துவிட்டால் உலகையே மிரட்டும் குழமமாக மாறிவிடலாம்!

குறிப்பாக பாகிஸ்தான் தற்காலிக போர்க்கள அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவும் சீனாவும் கட்டுப்பாடான சட்டதிட்டங்களுடன் அணு கட்டுமானத்தை உருவாக்கி உள்ளனர்.

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை ஆப்கான் அல்லது வேறு தீவிரவாத அமைப்புகளிடம் விற்பதற்கு தள்ளப்படும் அபாயமும் உண்டு!

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ‘முதல் தாக்குதல் இல்லை’ (No First Use) என்ற கொள்கையைக் கடைப்பிடித்தாலும் பாகிஸ்தானில் அத்தகைய கட்டுப்பாடுகளை அறிவித்ததே கிடையாது,

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை எப்போது வேண்டுமானாலும் தூண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் எடுத்தால், பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்காது எனத் தொடர்ந்து சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது.

2014–ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவின் அணுக் கொள்கை குறித்தும் அதில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. முன்னாள் பாதுகாப்பு மந்திரி மனோகர் பரிகர் மற்றும் தற்போதைய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்தியாவின் அணுக் கொள்கை 20 ஆண்டுகள் பழமையானது என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை சீரமைப்புச் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். இருப்பினும் அணுக் கொள்கை தற்போதைய இந்தியாவிற்கு பொருத்தமுடையதா, மற்றும் இந்தியா தனது உலகளாவிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முழு திறனுடன் இருக்கிறதா என்பதற்கு கடந்த ஒரு சகாப்தத்தில் எந்தவொரு தீவிரமான முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இந்தியா உலக அரங்கில் செல்வாக்கு கொண்டவொரு நாடாக மாறிவரும் நிலையில் பல்வேறு பிற சிக்கல்களும் எழத்தான் செய்யும். அதைச் சமீபத்து பங்களாதேஷ் கலவரங்களில் எதிரொலிக்கும் தொனியே நமக்கு உணர்த்துகிறது.

The String of Pearls அதாவது முத்து மாலை அணிவித்து, பிறகு அதே கழுத்தை நெறித்து விடுவது, என்பது அமெரிக்க அரசியல் ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்ட புவிசார் அரசியல் கருத்தாகும்.

அந்த முத்து மாலையில் இலங்கை, பங்களாதேஷ், மொரிஷியஸ் அங்கங்கள் ஆகும்.

இத்தகைய சூழலில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டியது மிக அவசியம்.

அணு ஆயுதங்கள் குறித்து உலகளாவிய அளவில் நிறைவேற்றம் மற்றும் அகற்றத்தில் ஒரு பொறுப்பான வழிகாட்டியாகவும் முக்கியமான குரலாகவும் இந்தியா உருவாக வேண்டியிருக்கும் தருணத்தில் அதன் அணுக் கொள்கை நம்பகுதி பாதுகாப்புச் சூழல் மற்றும் உலகளாவிய மாற்றங்களைப் பிரதிபலிக்க வேண்டும்.

இந்தியாவின் அணுக்கொள்கையில் நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இந்தியா தனது பாதுகாப்பு, அமைதி மற்றும் சர்வதேச ஒழுங்கு குறித்த தன்னம்பிக்கையை வலுப்படுத்த முடியும். இத்துடன், இந்தியாவின் வல்லரசுக் கனவுகளையும் நிலத்தினையும் சாத்தியமாக்கி, உலக அரங்கில் ஒரு தலைவராக மாறுவதற்கான வழியை உருவாக்குகிறது.

இந்தியாவின் அணுக் கொள்கையில் நடப்பிற்கேற்ற மாற்றங்களைச் செய்யும் போது, அதனுடைய கொள்கைகள் பொறுப்புடனும் திறமையாகவும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் வரும் கால இடையூறுகளை சமாளிக்கும் வகையில் அமைவதற்கு வழிகண்டாக வேண்டும்.

உலகளாவிய யதார்த்தங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழலின் நிர்ப்பந்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அணுசக்தி கோட்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்.

மாற்றமே நிரந்தரம் என்ற உணர்வில் அணுக் கொள்கைகளிலும் மாற்றம் சண்டை சச்சரவில்லா அமைதிப்பூங்காவாய் உலகமே மாறும் என்று உறுதியாய் நம்புவோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *