வாணி அலுவலகத்தில் நுழைகிறாள் என்றாள் அனைவரது கண்களும் வேலையை விட்டு விலகி வாணி அணிந்து வரும் சேலையின் மேல் தான் இருக்கும். இன்று என்ன கலர் சேலை என்று பார்ப்பார்கள்.
வாணி ஒரு தடவை கட்டிய சேலை மறுபடியும் அவள் கட்டுவது என்பது வருடக் கணக்கில் கூட ஆகும் என்பது அலுவலகம் முழுவதும் அறிந்த உண்மை.
வாணி கம்பெனி முதலாளிக்கு தனிப்பட்ட அதிகாரியாக தனி அறையில் இருப்பதால் யாரும் எளிதில் அவரிடம் சென்று பேச அச்சப்படுவர். ஆனால் வாணி எல்லோருக்கும் தக்க சமயத்தில் உதவுவதால் அவளுக்கென்று தனி மரியாதை அலுவலகத்தில் இருந்தது.
வீட்டிலிருந்து வாணி அலுவலகம் வந்து செல்லக் கார் ஒன்று ஏற்பாடாகி இருந்ததால் அலுவலகம் முடிந்ததும் வாணி பறந்து விடுவாள். அலுவலகத்தில் அவள் பம்பரமாய் சுழன்று வேலை செய்வாள். கம்பெனிக்காக உள்ளுர், வெளியூர் சென்று நிறைய ஆர்டர் பிடித்து வருவாள். இவளது சேவையால் கம்பெனி நிறைய லாபம் ஈட்டியது.
முதலாளி வாணியிடம் அடிக்கடி நான் உனது அண்ணண் என்று எண்ணிக் கொள் என்பார். ஆனால் முதலாளி தம்பியோ வாணி மீது ஒரு கண் வைத்திருந்தான். வாணி இதைக் கண்டு கொள்ளாமல் அவனிடமிருந்து சற்று ஒதுங்கியே நிற்பாள்.
அலுவலக வேலை சுணக்கம் ஏற்பட்டு முதலாளி யாரையாவது கூப்பிட்டு திட்டினால் இவள் முதலாளி அறைக்கே செல்ல மாட்டாள். மாறாக அறையிலிருந்து வெளி வருபவர்களிடம் என்ன கஷ்டம் எனக் கேட்டு உதவி செய்வாள்.
சில நாட்களாக கட்டி வந்த மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், பரமக்குடி, சென்னிமலை, கைத்தறி போன்ற சேலைகள் அணிவதை தவிர்த்து மற்ற மாநில சேலைகளாகிய மகாராஷ்டிரா நாவுரி சேலை, குஜராத் பந்தானி சேலை,மேற்கு வங்காள தந்த் சேலை, வாரணாசி பனாரஸ் சேலை, லக்னோ சிக்கான்காரி , ஒரிஸா போம்காய் , மத்திய பிரதேச சந்தேரி , கேரளா கசாவு , பஞ்சாப் புல்காரி சேலை, தெலுங்கானா, போச்சம்பள்ளி , கத்வால் சேலை என அணிந்து வந்து அலுவலகத்திலேயே பேசப்படும் பேரழகுப் பெண்ணாக வலம் வந்தாள்.
அலுவலகத்தில் பணியாற்றும் ரங்கனிடம் மற்ற பெண்கள் எல்லோரும் மதிய உணவு இடைவேளையின் போது இதுவரை வாணி கட்டி வந்த சேலையின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் என்று கேட்டவுடன் பட்டென்று அந்த எண்ணிக்கையை ரங்கன் கூற, சில சிரிப்புகள் எதிரொலித்தன. மத்தியில் அது அடங்கிப் போனாலும் பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் மத்தியிலும் எப்படி இவளால் இவ்வளவு சேலை வாங்க முடிகிறது என்ற கேள்வியும் எப்படி இதை வீட்டில் பாதுகாத்து வைக்கிறாள் என்ற கேள்வியும் எழுந்து அதை அவளிடம் கேட்க தைரியமில்லாமல் அடங்கிப் போய் விடுவார்கள்.
வகை வகையான சேலை கட்டும் வாணி என்று அவள் அறியா வண்ணம் அலுவலகத்தில் பேசிக் கொள்வார்கள்.
அன்று வீட்டிற்கு வந்த வாணியிடம் அவர் அப்பா, வாணி நான் சொன்னேனே அந்த வரன் பற்றி அவர்கள் இன்று தொடர்பு கொண்டு வர்ற ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வரலாமா என்று கேட்டனர் என்றார்.
நான் சொல்லுகிறேன் என்று சொல்லி தொடர்பை துண்டித்தேன் என்றார். உடனே
வாணி சரியென கூறுங்கள் என்றாள்.
வாணி அப்பா மற்ற ஏற்பாடுகளைச் செய்தார்.
மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும் முன் அவர்களுக்குள் வாணி சூப்பரான சேலையெல்லாம் கட்டுவாளாம், அவள் இன்று என்ன சேலை கட்டுவாள் எனப் பார்ப்போம், அவள் என்ன கூறுவாளோ என்று பேசிக் கொண்டனர்.
மாலை 3 மணிக்கு வாணி வீட்டை அடைந்தவர்கள், வீட்டைப் பார்த்ததும் பெரிய இடம் தான் போலிருக்கே, நாம் நினைத்தது போல் இல்லையென பையனின் தாய் கூற, நான் தான் சொன்னேனே அம்மா அவர்கள் நமக்கு பொருத்தமானவர்கள் தான் என்று மாப்பிள்ளையின் தங்கை கூறினாள். அவர்களை வரவேற்று இருக்கையில் அமரச் சொன்ன வாணி அப்பா,
பல விஷயங்களை பேசி விட்டு வாணியை வரச் சொன்னார்.
வாணி சித்திரக் கைத்தறி சேலையில் அலங்கார சொரூபியாய் வந்தது கண்ட மாப்பிள்ளை வீட்டார் அப்படியே அசந்து போய் அவளை வைத்த கண் வைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சில சம்பிரதாய நிகழ்வுகளுக்குப் பின் மாப்பிள்ளை அம்மா நேரடியாகவே அவளிடம் அலுவலகத்திற்கு வகை வகையான சேலைகள் உடுத்தும் நீங்கள் இன்று சித்திர கைத்தறி உடுத்தியது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்றனர்.
வாணி அலுவலக அணுகுறை வேறு, குடும்ப அணுகுமுறை வேறு என்று கூற,
மாப்பிள்ளையின் தங்கை தன்னை மறந்து சபாஷ் அண்ணி என்று கூற
அதுவே வாணி திருமணத்திற்கு அச்சாரமாய் அமைந்தது.
மறு நாள் அலுவலகத்தில் வாணியை சந்தித்த முதலாளியின் தம்பி ,
‘‘யாருக்கு யார் என நிச்சயம் பண்ணியதை மாற்ற முடியாது. நீங்கள் கட்டியிருந்த சித்திர கைத்தறி சேலை உங்கள் அழகை மெருகூட்டியது ’’ என்றான்.
வாணி நன்றி சொல்லுவதற்குள்….
வெளியே ஒலி பெருக்கியில் சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலை…. என்ற பாடல் ஒலித்தது.
இருவரும் அலுவலகத்தை மறந்து சிரித்தனர்.