செய்திகள்

‘‘அணிந்து மகிழ்வோம் கதராடைகளை; ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை :’’ முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Makkal Kural Official

சென்னை, அக். 2–

‘‘கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்விலும் உயர்வு ஏற்படுத்திட, கதர்த் தொழிலுக்குக் கை கொடுப்போம்’’ என்று இன்று உத்தமர் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘‘அணிந்து மகிழ்வோம் கதராடைகளை ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை’’ என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘தமிழ்நாட்டிலுள்ள கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதார மேம்பாட்டினையும், அவர்களது நலன்களையும் கருத்திலே கொண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது “அகிம்சை ஆயுதமாக” காந்தியடிகளால் முன்மொழியப்பட்ட கதர், கைத்தறி ஆடைகளைத் தயாரிப்பது, அதையே அணிவது என்பதன் அடிப்படையில், கை இராட்டைகளைக் கொண்டு நூல் நூற்பதிலும், கதர் இரகங்களை நெசவு செய்வதிலும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால் நவீன சூழலுக்கு ஏற்ப புத்தம்புது வடிவமைப்புகளில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் நெசவு நெய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட கிராமப் பொருட்களை தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு தூண்டுகோலாய் துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

30% தள்ளுபடி

பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கதர் பருத்தி, கதர் பாலியஸ்டர் மற்றும் கதர் பட்டு இரகங்களை வழங்க வேண்டுமென்ற நோக்கில் ஆண்டு முழுவதும் 30% விற்பனைத் தள்ளுபடியை அரசு அனுமதித்துள்ளதால், ஆண்டு முழுவதும் தள்ளுபடி விலையில் அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

காந்தியடிகளின் 156-வது பிறந்த நன்னாளையொட்டி, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில், தேச நலன் காக்கும் கதர் மற்றும் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டுமென மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *