செய்திகள்

அட்சய திருதி நாளில் 3 முறை விலை உயர்ந்தும் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை

இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை, மே 11–

அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்த நிலையிலும் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையானது. இது கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகம் ஆகும்.

இன்று மதியம் வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் மக்கள் நகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, ‘அட்சய’ திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள். அனைத்து நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் இந்த திருதியை நாளன்று, வாங்கும் பொருள் இல்லங்களில் அளவில்லாமல் சேரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது. அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கை யாளர்களை கவரும் வகையில் நகைகடைகள் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. சவரனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, பழைய நகைகளுக்கு கூடுதல் விலை, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி என சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் விதவிதமான டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த நகைகளை வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து பெண்கள் மகிழ்ச்சியுடன் அணிந்துக்கொண்டனர். நகைக்கடைகளில் நேற்று காலை 6 மணி முதல் இரவு வரை 12 மணி வரை நகைகள் விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் 2.50 மணி வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் மக்கள் நகைகளை அதிக அளவில் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும் பல கோடிக்கு தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்சய திருதியை விற்பனை தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.தேர்தல் நடைமுறை அமலில் இருந்தபோது, பொதுமக்களால் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது, அந்த நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், அட்சய திருதி நாளில் மக்கள் அதிகளவு நகைகளை வாங்க குவிந்தனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்கம் உள்பட நகைகள் விற்பனை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதன்மூலம், நேற்று ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தங்கம் உள்பட பல்வேறு நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

3 முறை உயர்வு

முன்னதாக, நேற்று அட்சய திருதியை தினத்தன்று ஒரேநாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,660-க்கு விற்பனையானது. பின்னர், காலை 8 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,705-க்கு விற்பனையானது. இதற்கிடையே, பிற்பகல் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அப்போது, கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.6,770-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனையானது.

இன்று குறைந்தது

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,750-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.90.50-க்கு விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *