சிறுகதை

அடையாளம் வேண்டும்… | ராஜா செல்லமுத்து

Spread the love

ஞானசம்பந்தம் எதற்கெடுத்தாலும் சிற்பியை கூப்பிடுவது கமலாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை.

‘ஏங்க, நீங்க என்ன எதுக்கு எடுத்தாலும் சிற்பியவே கூட்டிட்டு இருக்கீங்க. அது எனக்கென்னவோ நல்லதா தட்டுப்படல ‘ என்று மனைவி ஞானசம்பந்தரிடம் முறையிட்டாள்.

‘ சிற்பியை பத்தி நீ என்ன நினைக்கிற கமலா. அவன் ஒரு பத்தரை மாத்து தங்கம். பொண்ணுங்க கிட்ட எட்டி நில்லன்னு சொன்னா, ஒரு கிலோ மீட்டர் தள்ளியே நிப்பான். அவன மாதிரி ஒரு ஆள நாம எங்கேயும் பார்க்க முடியாது. அதை விட ரொம்ப முக்கியமான விஷயம், அவன் கல்யாணம் ஆனவன். அதனால அவன நம்பி நம்ம பொண்ணுங்கள எங்க வேணும்னாலும் தைரியமா அனுப்பி விடலாம் ‘ என்று சிற்பிக்கு ஆதரவாக பேசினார் ஞானசம்பந்தம்.

‘அப்ப நான் சொல்றத என்னன்னு கேக்க மாட்டீங்க’ அப்படித்தானே கமலா பேசும்போது, கொஞ்சம் கோபம் கொப்பளித்தது.

‘ உனக்கு எப்பவும் ஒரே சந்தேகம் தான். யார் யார சந்தேகப்படணும்னு உனக்கு விவஸ்தையே இல்ல கமலா. அதான் சொன்னனே சிற்பி ரொம்ப நல்ல ஆள். அதோட அவனுக்கு கல்யாணம் வேற ஆயிடுச்சின்னு. நீ ஒண்ணும் கவலைப்படாத. பொண்ணுங்க விஷயத்துல அவனை நாம முழுசா நம்பலாம் ‘ என்று சிற்பிக்கு மேலும் சில சிறப்புகளை சொல்லிக் கொண்டிருந்தார் ஞானசம்பந்தம். கணவரின் பேச்சு கமலாவுக்கு கசப்பாகவே இருந்தது. இவரு நாம சொன்னா கேக்க மாட்டாரு ஒரு நாள் பட்டால் தான் தெரியும் ‘ என்ற கமலா, கொஞ்சம் தள்ளியே நின்றாள்.

இன்று அலுவலக வேலையாக நான் ஞானசம்பந்தத்தின் 2 மகள்களும் வெளியே செல்ல வேண்டி இருந்தது.

‘ அப்பா, நானும் அக்காவும் போயிட்டு வாரோம்பா ‘

‘ தனியாவா?’

‘ ஆமாம்பா ‘

‘ சிற்பிய கூட்டிட்டு போங்களேன் ‘

‘ வேணாம்பா நேசனக் கூட்டிட்டு போகட்டுமா ?

‘ யாரு, கல்யாணம் ஆகாம திரியுறானே அவனா? வேணாவே வேணாம்.

நேசன் ரொம்ப நல்லவன்பா, பெண்களோட விஷயத்துல அவன் ஒரு ஜென்டில்மேன் ‘ என்று மகள்கள் சர்டிபிகேட் கொடுத்தும் , ஞானசம்பந்தன் அதற்கு செவி சாய்க்கவில்லை.

‘ சிற்பிய கூட்டிட்டு போம்மா ‘ அவன் ரொம்ப நல்லவன் ‘ என்று ஞானசம்பந்தன் சான்றிதழ் கொடுத்து சிற்பியை மகள்களுடன் அனுப்பினார்.

இரண்டு பெண்களும் அரைமனதாக கிளம்பினர். முகத்தில் செயற்கை சிரிப்பை அப்பிக் கொண்டு ‘ ஈ’ வெனச் சிரித்தபடியே ஞானசம்பந்தரின் வீட்டின் முன்னே வந்து நின்றான் சிற்பி.

அவனைப் பார்த்ததும் 2 பெண்களுக்கும் முகத்தில் ‘ஈ’ யாடவில்லை.

‘ போகலாமா? இவன் சிரிப்பே சிக்கலை முடிவதாக இருந்தது.

அப்பா நேசன கூப்பிட்டுகிறவா?

ஏம்மா, அப்பா சொன்னா கேட்க மாட்டீங்களா?

அவன் கல்யாணம் ஆகாத பய அவன் கூட நீங்க போக வேணாம் சிற்பி கல்யாணம் ஆனவன். அதுலயும் ரொம்ப கன்னியமானவன் என்று ஞானசம்பந்தம் தொடர்ந்து சர்டிபிகேட் கொடுத்து கொண்டே இருந்தார்.

‘போகலாமா டைம் இல்ல வாங்க வாங்க அவசரப்படுத்தினான் சிற்பி.

ஆளும் அவனும் பாரு ரிசர்வ் பேங்க் கவர்னர் மாதிரி ‘இன் சர்ட்’ வேற என்று மனதிற்குள்ளேயே புலம்பினர் மகள்கள்.

‘ பஸ்ல போனா லேட்டாகும் ‘ ஆட்டோவுல போகலாமா? என்று கேட்க, அவன் சொல்வது சரியென படவே, 3 பேரும் ஆட்டோவில் ஏறினார்.

2 பெண்களையும் முன்னால் உட்கார வைத்தவன் இருவரையும் நெருக்கி அணைத்து உட்கார்ந்தான். ஆட்டோ கொஞ்ச தூரம் செல்லவும் ‘ காபி சாப்பிட்டுட்டு போகலாமா? என்றான் வாயில் வழியும் ஜொள்ளுடன்.

‘ வேணாம் டைம் ஆயிருச்சு ‘ அதுக்கு தான ஆட்டோ எடுத்திருக்கோம். காபி சாப்பிட்டே போகலாம் ‘ என்ற சிற்பி 2 பெண்களையும் வலுக்கட்டாயமாக காபி ஷாப்பில் இறக்கினான். 2 பெண்களுடன் இணைந் போனது, சிற்பிக்குப் பெரும் சிறப்பாகவே இருந்தது.

‘ காபி ‘ என்று ஆணவமாக ஆர்டரை கொடுத்து விட்டு இன் சர்ட்டை மீண்டும் ஒரு முறை இழுத்து விட்டான்.

3 காபிகள், 3 பேரின் முன்னால் வந்தன.

‘ உர் உர் உர் என உறிஞ்சினான் சிற்பி. அவன் உறிஞ்சுவதே ஒரு மாதிரியாக இருந்தது.

‘ ச்சே, இவன போயா அப்பா நல்லவன்னு சொல்றாரு ‘ என்ற பெண்கள் சற்று நெளிந்தே உட்கார்ந்தனர்.

ஆட்டோ கிளம்பியது சிற்பியின் சில்மிஷம் அதிகமாக படாரென ஒருத்தி கன்னத்தில் அறைந்தாள்.

‘ ச்சே… நாயே… உன்னை போயாடா எங்க அப்பா நல்லவன்னு சொன்னாரு.

கல்யாணம் பண்ணிட்டாங்கிற அடையாளம் இருந்தா, நீ என்ன வேணும்னாலும் செய்வியா? எறங்குடா கீழ ‘ ஒரு சிற்பியைப் பிடித்து கீழே தள்ளினாள். அவமானத்தால் கீழே விழுந்தான் சிற்பி.

‘ இனிமே எங்க வீட்டு பக்கம் வந்திராத ஓடுடா ‘ என்று விரட்ட மீண்டும் இன்சர்டை ஒருமுறை எடுத்துக் கொண்டான் சிற்பி.

உனக்கு இன்சர்ட் ஒரு கேடு , அவன் முகத்தில் எச்சில் உமிழ, அவன் மொத்த அடையாளமும் அழிந்தது.

ஞானசம்பந்ததத்திடம் விஷயத்தை சொல்ல, அப்போது தான் அவருக்கு ஒன்று பிடிபட்டது. திருமணம் ஆனவனெல்லாம் நல்லவன் இல்லை. திருமணம் ஆகாதவன் எல்லாம் கெட்டவன் இல்லை என்பது அவர் புத்தியில் ‘சுர்’ரென உறைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *