செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார தற்சார்பு நாடாக மாற வேண்டும்: மோடி பேச்சு

மும்பை, ஏப்.2-–

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார தற்சார்பு நாடாக மாற வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழா நேற்று மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் உள்ள என்.சி.பி.ஏ. அரங்கில் நடந்தது. விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவை நினைவுக்கூறும் வகையில் நாணயத்தை வெளியிட்டார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டின் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சியில் ரிசர்வ் வங்கியின் பங்கு முக்கியமானது. வங்கித்துறையில் விதி அடிப்படை யிலான ஒழுக்கம் மற்றும் நிதிசார்ந்த விவேகமான கொள்கையை புகுத்தியது ரிசர்வ் வங்கியின் சாதனை ஆகும். வங்கிகளுக்கு அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும். அதே நேரத்தில் பல்வேறு துறைகளின் தேவைகளை வங்கிகள் முன்கூட்டியே மதிப்பீடு செய்ய வேண்டும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். தொடர் விலை கண்காணிப்பு மற்றும் நிதி ஒருங்கிணைப்பு போன்ற நடவடிக்கைகள் கொரோனா தொற்று போன்ற கடினமான காலங்களில் கூட பணவீக்கத்தை மிதமான நிலையில் வைத்திருந்தது. பொருளாதார முன்னேற்றத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நாட்டின் நோக்கம் தெளிவாக இருந்தால், அந்த நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது.

உலக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 15 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியா, உலகின் பொருளாதார வளர்ச்சிக்கான என்ஜினாக மாறி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் இருந்து உலகின் பல நாடுகள் மீள முயற்சி செய்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் நாம் இணைந்து பெரிய காரியத்தை செய்ய வேண்டும். இந்த காலக்கட்டத்தில் இந்தியா பொருளாதார தற்சார்பு நாடாக மாற வேண்டும். சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டால் கூட நமது பொருளாதாரத்தில் குறைந்தபட்ச பாதிப்பு தான் ஏற்பட வேண்டும். உலகம் முழுவதும் ரூபாயை அணுகக்கூடியதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடிய தாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விண்வெளி, சுற்றுலா போன்ற புதிய மற்றும் பாரம்பரிய துறைகளுக்கு உதவ வங்கிகள் தயாராக இருக்க வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக எனது ஆட்சி அமையும். அப்போது உங்களுக்கு (அதிகாரிகளுக்கு) நிறைய வேலைகள் இருக்கின்றன. புதிய வேகத்துடன் நீங்கள் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், மராட்டிய கவர்னர் ரமேஷ் பயஸ், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *