சிறுகதை

அடுத்த வாரிசு வந்தாச்சு! – டிக்ரோஸ்

Makkal Kural Official

இடம் சென்னையின் ஜிடி வளாகம் ஒன்றில் ராகவி தன் கணவர் மூர்த்தியுடன் செல்போன் கலந்துரையாடல்

ராகவி : டூர் முடிஞ்சி உடனே சென்னை வராம ஊர் சுற்ற நண்பர்களுடன் போய்டாதீங்க ப்ளீஸ், என அருகாமையில் இருப்பவர்கள் ஏதோ கொஞ்சிப் பேசுவது போல் வெகுளித்தன துடுக்குடன் சொல்லிக்கொண்டு இருந்தது. இருந்தாலும், அவள் குரலின் வலிமை மூர்த்தியின் இருதயத்தையும், மண்டையையும் ஈட்டியாய் குத்தியது.

புதன்கிழமையே பெங்களூருவில் அலுவல் பணிகள் முடிந்து விட்டது, சொந்த நிறுவனம், கேட்க மேலதிகாரியாய் இருப்பது தாலி கட்டிய மனைவி ராகவி மட்டுமே! ஆகவே ஜாலியாக இருந்தது போதும் என உணர்ந்து வெள்ளிக்கிழமை மாலை வந்தே பாரத்தில் திரும்ப முன்பதிவு செய்துவிட்டு அந்த தகவலை ராகவியிடம் I am coming, என ஆசை வார்த்தைகளின் அடையாளமாய் சில எமோடிகான்களையும் வாட்சப்பில் அனுப்பிவிட்டு வந்த முக்கிய பணிகளில் மூழ்கினான்.

அப்படி என்ன வியாழக்கிழமை அதுவுமாய் வேலை? அதுவும் ஜாலி நகரத்தில்? என ஒன்றும் தெரியாது போல் கேட்க மாட்டீர்கள்! ராகவியும் அப்படியே…

அந்த தகவலைப் படித்த ராகவி, அப்படீனா சனிக்கிழமை பெங்களூரில் வார இறுதி கும்மாளம் கிடையாதா? வரட்டும் விருந்து கொடுத்து விடலாம் என மறுநாள் இரவுக்கு அறுசுவை உணவுகளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கத் துவங்கினாள்.

அத்துடன் தன் அம்மா கடந்த ஒரு மாதமாகவே ஆலோசனை தந்து கொண்டிருந்து மருத்துவ செக்அப்புக்கும் தயாரானாள்.

பின்ன திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்து விட்டது, பேரனோ – பேத்தியையோ கொஞ்சி விளையாட ஆசை இருக்கும் அல்லவா?

இவர்கள் கல்யாண நாள் முதலே குழந்தையைத் தள்ளிப் போடும் எண்ணம் ஏதும் கிடையாது என இருந்தவர்கள், ஆகவே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என அம்மா தந்த அறிவுரை சரிதான் என உணர்ந்து விட்டாலும் இதை எப்படி மூர்த்தியிடம் விளக்குவது?

எப்படியும் ஒரு வார பிரிவுக்குப் பிறகு சந்திக்கிறோம் என்பதால் தன் வார்த்தைக்கு முழுசக்தி இருக்கும் என நம்பிக்கையுடன் மகப்பேறு மருத்துவர் டாக்டர் மதுமிதாவிடம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சந்திப்பு நேரத்தையும் வாங்கி விட்டாள்.

வெள்ளி இரவு 9.30 மணிக்கு வீடு வந்த மூர்த்திக்கு வயிறாற உணவு சாப்பிட்ட பின் பெங்களூரு வாகன நெரிசல், வந்தே பாரத் பிரயாணம் என்பதை விவரித்து தன் அசதியைக் கூறியபடி 10.40க்கே கொறட்டைவிடும் தூக்கத்திற்கு சென்று விட்டான்.

நாளை வீட்டில் தானே இருப்பார், பார்த்துக் கொள்ளலாம் என ராகவியும் தூங்கி விட்டாள்.

மறுநாள் காலை உணவுக்கு பிறகு மூடுக்கு வந்து விட்ட மூர்த்தி மெல்ல சனிக்கிழமையின் சுகத்தை அனுபவித்தபடி மதிய உணவுக்கு முன்பு மணக்க மணக்க இருந்த சூப்பை குடித்துவிட்டு சோபாவில் சாய்ந்திருந்த தருணத்தில்,

‘மூர்த்தி, ப்ளீஸ் do not mistake me, நாம் 4 மணிக்கு மகப்பேறு மருத்துவர் மதுமிதாவை மருத்துவ ஆலோசனைக்காக பார்க்கப் போகிறோம் எனக்கூற, அவனது வயிறு ஏதோ செய்தது! காலை இட்லி சட்னியுடன் மட்டன் சால்னா, பிறகு முன்மதிய உணவாய் ஆட்டுகால் சூப் சாப்பிட்டா இப்படி ஆகுமா? என யோசிக்காதீர்கள், பிறருக்கு எப்படியோ, மூர்த்தியின் வயிறு இதையும், இத்துடன் எதைஎதையோ உள்வாங்கி ஜீரணித்துக் கொண்டிருக்கும் சக்தி பெற்ற ஒன்று!

ஆனால் இப்படி இயலாமை, முடியாமை என்பது பற்றி அச்சமில்லா 34 வயதில் இது பற்றி மருத்துவரிடம் ஆலோசனையா?

ஏய் ராகவி உனக்கு 30 வயது தாண்டி, ஒரு வருஷம் கடந்த பிறகு நல்லது நடக்கலேன்னா மருத்துவர் உதவியை நாடலாமே… என கோபமாகக் குரல் உயர்த்திப் பதில் சொல்ல, அவளோ, நீங்க ஆச்சி, உங்க மாமியார் ஆச்சி, டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியது அவர்கள் தான் என பிரம்மாஸ்திரத்தை வீச, அதில் இருந்து தப்பித்து நழுவ முடியாமல் சரி, சரி என தலையாட்டி விட்டு பலி ஆடுபோல் சரியாக 3.45 மணிக்கே மருத்துவமனையில் முன்பதிவு விவகாரங்களை செய்துவிட்டு மருத்துவ ஆலோசகரின் சந்திப்புக்கு தயாராகி விட்டான்.

35 வயதே இருக்கும், அந்த மருத்துவர் சென்னையின் ஜனத்தொகை பெருக்கத்திற்கு குறைபாடின்றி நல்வழி காட்டி வரும் தன் ராசியான கரத்தை கொண்டு ராகவி, மூர்த்தி தம்பதிகளின் பைல்களை ஏந்தி பல கேள்விகள், பதில்களில் ஏதேனும் வெட்கத்தால் நழுவல், விடுதல் இருந்தால் சிரித்தபடி பரவாயில்லை மனிதனுக்கு இதெல்லாம் சகஜம் தைரியமா பதில் சொல்லுங்க என கேள்விகளுக்கு உண்மையான பதில்களை வாங்கி விட்டாள்.

என்ன கேள்வி, என்ன பதில், இதெல்லாம் இன்று பேசி நேரத்தை வீணாக்காமல் அவர்களிடம் தரப்பட்ட ஆலோசனைகள் ‘முழு மனதுடன் ஒருவரை ஒருவர் புரிதலுடன் மன மகிழ்ச்சியோடு வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்’ என்பதே.

‘ஏதேனும் மருந்து மாத்திரை…’ என ராகவி ஆர்வத்துடன் கேட்க ‘இருவரும் வீரியத்துடன் இருக்கும்போது வேறு மருத்து மாத்திரை எதுவுமே வேண்டாம்’ என கூறி விட்டாள்.

மூர்த்திக்கு புது தெம்பு வர இருவருக்கும் இருக்கும் நலன் மேலும் நம்பிக்கை தர மருத்துவமனையில் இருந்து விருட்டென்று வெளியேறி ஜெட் வேகத்தில் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இரவு 11 மணியை நெருங்கிய கட்டத்தில் ராகவி மெல்ல மூர்த்தியின் காதில் சொன்னது, ‘இந்த முறை நிச்சயம் நான் பிரக்னெட்…’ என கூறியபடி நாணமும், சோர்வும் தந்த அசதியில் கண் மூடியபடி உறங்கி விட்டாள், மூர்த்தியும் தான்.

–––––––––––––––––––––––––––––––––––––––––

பாகம் – 2

–––––––––––––––––––––––––––––––––––––––––

சரியாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மருத்துவமனையில் அனுராதாவின் மருத்துவ குறிப்புகள் கொண்ட பைலை புரட்டி விட்டு ‘அனு Congrats’ என கூறியது அதே மருத்துவர் டாக்டர் மதுமிதா! பைலை மேஜையில் வைத்துவிட்டு தலை நிமிர்ந்து பார்த்தபோது அந்தத் தம்பதிகளின் முகத்தை பார்த்தவுடன் டாக்டர் மதுமிதாவுக்கு ஷாக்!

‘என்ன மிஸ்டர் கிருஷ்ணா, excitement is missing, என்ன ஆச்சு? என கேட்க அனு சற்றே வெட்கத்தில் சிவந்த முகத்தை தன் பைலில் கவனம் செலுத்தி விட்டு பிறகு மெல்ல அவளும் கிருஷ்ணாவை உற்றுப் பார்த்தாள்.

கிருஷ்ணாவுக்கு டாக்டர் மதுமிதாவை நேருக்கு நேர் பார்க்கத் தயக்கம், தன் பார்வையை அதே பைல் மீது வைத்தான்.

இருவரும் இது எத்தனையாவது மாதம்? என கேட்க 3வது மாதம், அனு நீ போன மாதமே புரிந்து கொண்டிருப்பாய் அல்லவா?

என கேட்டவுடன் அந்த நேரத்தில் பெங்களூரில் மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை வந்தே பாரத் ரெயிலில் புறப்பட்டு சென்றாக வேண்டிய நாள் நெருங்கி விட்டதை மனதில் சஞ்சரித்துக் கொண்டிருந்த எரிச்சலில் கிருஷ்ணாவை ‘இந்த அனுவா, அந்த ராகவியா’? என கேட்டு கிருஷ்ணாவை மிரட்டிக் கொண்டிருந்த தருணங்கள் நினைவுக்கு வந்தது.

கொடுத்துக் கொண்டு இருந்த மருத்துவ ஆலோசனைகளை தலையாட்டியபடி கேட்டுக்கொண்டே இருவரும் வெளியேறினர். மெய் மறந்து வெளியேறிக் கொண்டிருந்த அத்தருணத்தில் வரவேற்பு பகுதியில் இருந்த அப்பெண்மணி ‘சார், கிருஷ்ணமூர்த்தி சார், நில்லுங்க சார், இந்த பில்லை கட்டிட்டு போங்க சார், என கூறியபடி அவனை வழி மறித்தாள்.

பிறகு மாலை வீட்டிற்குப் போகும் முன் அனுராதாவை அவளது வீட்டில் இறக்கி விட்டு நண்பர்களிடம் ஆலோசிக்கச் சென்றான்.

அவர்கள் கொண்டாடுவதா, இவனோடு சேர்ந்து மவுனமாக இருப்பதா? என்ற குழப்பதில் இருக்கும்போது இவனது செல்போன் உயிர் பெற்றது, கூப்பிட்டது மாமியார் தான்.

என்ன மாப்பிள்ளை நல்ல செயதி தள்ளிப் போய் கொண்டே இருக்குது, வாங்க ஒரு நடை குலதெய்வ கோயிலுக்கு போய்ட்டு வரலாம் என கூறியது மாமனார் என்பதால் மறு நிமிடமே மறுநாள் ஊருக்குப் புறப்பட ஏற்பாடுகள் செய்து விட்டு ராகவிக்கு நேரில் விஷயத்தை கூறி விடுலாம் என முடிவெடுத்தான்.

நண்பர்களின் ஆலோசனை எப்படி இருந்தாலும் கிருஷ்ணமூர்த்தியின் அடுத்த வாரிசு வருவதை தடுக்கவா முடியும்?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *