புதுடெல்லி, ஜன. 7–
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அடுத்தமாதம் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா (வயது 36). திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பிறகும் இந்தியாவுக்காகத் தொடர்ந்து விளையாடி வருகிறார். 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சானியா டென்னிஸ் வீராங்கனையாகத் தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். இந்திய டென்னிஸ் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள சானியா, பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்துள்ளார். இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் மூன்று மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். 2007-ம் ஆண்டு ஒற்றையர் தரவரிசையில் 27-வது இடத்தில் இருந்தது அவரது அதிகபட்ச சாதனை ஆகும்.
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அந்த போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்த சானியா மிர்சா கூறுகையில், என் ஓய்வு முடிவை முன்கூட்டியே அறிவித்ததற்கு வருத்தப்படுகிறேன். எனக்கு வயதாகிக்கொண்டே வருகிறது. என் உடல் சோர்வாக இருப்பதாக உணர்கிறேன். இன்றைய போட்டியில் கூட என் முழங்கால் வலித்தது. நாங்கள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இதுபோன்ற காயங்களில் இருந்து குணமடைய இப்போதெல்லாம் நிறைய நாட்கள் ஆகின்றன.
இந்த ஆண்டு விளையாடுவதற்குப் போதுமான உடல் தகுதியில் இருப்பதாக உணர்கிறேன். குறைந்தபட்சம் அமெரிக்க ஓபன் தொடர் வரையாவது விளையாட வேண்டும். அதுவே எனது இலக்கு என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் விளையாடினார்.
தற்போது தனது ஓய்வு முடிவை சானியா மிர்சா மீண்டும் வெளியிட்டுள்ளார்.
மகளிர் டென்னிஸ் சங்கதிற்கு அளித்த பேட்டியில் சானியா மிர்சா ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டார். மிர்சா ஓய்வு பெறுவதற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி உள்ளார்.
அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் இரட்டையர் சாம்பியன் விடிஏ 1000 போட்டிக்கு பிறகு விடைபெறுவார் என கூறப்படுகிறது.