தலையங்கம்
போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் சமீபத்தில் காலமானதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அவரது உடல் வாடிகனில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, உலகெங்கும் இருந்து கார்டினல்கள் விரைவில் வாடிகனில் கூடி, அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் ‘கான்கிளேவ்’ அதாவது மதகுருமார்களின் மாநாடு எனப்படும் மரபு துவங்க இருக்கிறது..
கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்ட மத தலைவர் என போற்றப்படும் போப் ஆண்டவரை தேர்வு செய்யும் இந்த ரகசிய செயல்முறை, பண்டைய ரோமானிய முறைப்படி தொன்றுதொட்டு பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கார்டினல்கள் கல்லூரியில் 252 பேர் உள்ளனர். அதில் வாக்களிக்கத் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட 135 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதில் பங்கேற்க முடியும்.
இந்த முறைதான் திருச்சபை வரலாற்றிலேயே அதிகமான வாக்களிக்கத் தகுதியுடைய கார்டினல்கள் பங்கேற்க இருக்கும் தேர்தலாகும்.
மாநாடு வாடிக்கனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடத்தப்படுகிறது, அங்குதான் கார்டினல்கள் கூடி தங்கள் பணிகளைச் செய்கிறார்கள்.
மாநாட்டில் கார்டினல்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கிறார்கள். பின்னர், ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மை வாக்கு பெற்ற கார்டினல், அடுத்த போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
துக்கக் காலத்திற்குப் பிறகு, தற்போது போப்பாண்டவர் மாநாட்டில் வாக்களிக்க தகுதியுடைய 135 கார்டினல்களில் நான்கு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் கார்டினல் பிலிப் நேரி ஃபெராவ், கார்டினல் பசேலியோஸ் கிளீமிஸ், கார்டினல் அந்தோணி பூலா மற்றும் கார்டினல் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகியோர் அடங்குவர்.
மறைந்த போப் பிரான்சிஸ் தனது பதவிக்காலமான 12 ஆண்டுகளில் வாக்களிக்க தகுதியுடைய 108 கார்டினல்களை நியமித்துள்ளார். இது ஒரு திட்டமிட்ட நல்முயற்சியாகக்தான் தெரிகிறது. அவர் பன்மைத்துவம் மற்றும் முற்போக்கான கொள்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களை நியமித்தார் என வாடிகன் நிபுநர்கள் கருதுகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி, ஐரோப்பியர் அல்லாத கார்டினல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2013இல் ஐரோப்பியர்கள் 52% இருந்த நிலையில், தற்போது வாக்களிக்கும் வயதுடைய கார்டினல்களில் அவர்கள் 39% மட்டுமே உள்ளனர். போப் பிரான்சிஸ் நியமித்த 108 கார்டினல்களில் 38% ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், 19% லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளிலிருந்து மேலும் 19% ஆசியா-பசிபிக் பிராந்தியத்திலிருந்து வருகிறார்கள்.
இந்த மாற்றங்கள், தேர்ந்தெடுக்கப்படும் புதிய போப்பின் பார்வை, கொள்கை மற்றும் திருச்சபையின் உலகளாவிய முடிவுகளில் பல புதுப்புது மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது..
உலக கத்தோலிக்கர்களின் கவனமும் அடுத்த போப்பை தேர்வு செய்யும் நாளை எதிர்பார்ப்போடு கவனித்து வருகிறார்கள்.
1274 முதல் தான் கான்கிளேவில் உள்ள கார்டினல்களின் ஜனநாயக வாக்கெடுப்பால் தேர்வு செய்யும் முறை நடைமுறைக்கு வந்து இருக்கிறது.
1059 வரை உள்ளூர் மதகுருமார்கள் மற்றும் மக்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1059 மற்றும் 1139 க்கு இடையில் மதகுருமார்கள் மற்றும் மக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு கார்டினல்களிடையே உடன்படிக்கை பெற்றவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சாமானிய உள்ளூர் மதகுருமார்கள் மற்றும் மக்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டிய தேவையை நிராகரித்தது.
1139 முதல் 1274 வரை கார்டினல்கள் சந்தித்தனர், ஆனால் ரகசிய முறையில் இன்றி இருந்ததால் நிறைய அரசியல் தலையீடுகள் இருந்தன. சில நேரங்களில் ஏழு கார்டினல்கள் குறைவாகவே இருந்தனர், அல்லது இன்னும் அதிகமாக இருந்தால், சிலர் கலந்து கொள்ள முடியவில்லை. காரணம் விமானப் பயணம் வருவதற்கு முன்பான காலகட்டத்தில் அமெரிக்க கார்டினல்கள் பெரும்பாலும் போப்பாண்டவர் தேர்தல்களில் கலந்து கொள்ள முடியவில்லை, காரணம் அவர்களின் கப்பல்கள் அட்லாண்டிக் கடக்கும் நேரத்தில் தேர்தல்கள் முடிந்துவிட்டன.
அடுத்த போப்பாண்டவர் தேர்வுக்கு கார்டினல்கள் மாநாடு கூடும் நாளுக்காக ஆவலோடு காத்திருப்போம்.