பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பரபரப்பு
பாட்னா, டிச. 14–
2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை, தேஜஸ்வி யாதவ் தலைமையில் சந்திப்போம் என, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழைய கூட்டணிக் கட்சியான, லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இதை அடுத்து, பீகார் மாநில முதலமைச்சராக, நிதிஷ் குமார் பதவியேற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார்.
இதற்கிடையே, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, நிதிஷ் குமார் முன்னிலைப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கேற்றவாறு, அவரும் பாஜக எதிர்ப்பு மனநிலைக் கொண்ட கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் வகையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அடிக்கடி தலைநகர் டெல்லிக்கு பயணமும் மேற்கொண்டு வருகிறார்.
தேஜஸ்வி தலைமையில் தேர்தல்
இந்நிலையில் பாட்னாவில் நேற்று, மகாகத்பந்தன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியதாவது:–
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பிரதமர் வேட்பாளர் நான் இல்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என, பெரும்பாலான அரசியல் கட்சிகள் கருதுகின்றன.
அனைத்து கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன். 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்லில், தேஜஸ்வி யாதவை முன்னிலைப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.