செய்திகள்

அடுத்தடுத்து 400 ஏவுகணை வீசி ஈரான் தொடர் தாக்குதல் : இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

Makkal Kural Official

‘‘ஏவுகணைகளை நடு வழியில் வீழ்த்துங்கள்’’ : ராணுவத்துக்கு ஜோ பைடன் உத்தரவு

ஜெருசலேம், அக்.2–

இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. உடனடியாக பொதுமக்களுக்கு சைரன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் சேத விவரங்கள் பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசிக்க இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும். முன்னதாக யாபா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தெஹ்ரானின் (ஈரான் தலைநகர்) தலையீடு இருக்கிறது. நம்மை தற்காத்துக் கொள்ளும் நம்முடைய உறுதியை ஈரான் புரிந்து கொள்ளவில்லை. இஸ்ரேலை நோக்கி ஈரான் 400க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியுள்ளது. ஆனால் அவர்களின் இந்த தாக்குதல் தோல்வியடைந்து விட்டது என்றார்.

உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இஸ்ரேல் விமானப் படையால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆதரவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். லெபனான், காசா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தீய சக்திகளுடன் நாங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய வீரர்கள் அங்கு தீவிரமாக களமாடி வருகின்றனர். முன்னெப்போதையும் விட அயத்துல்லாவின் இருண்ட ஆட்சிக்கு எதிராக உலக சமூகம் இஸ்ரேலுடன் ஒன்றிணைய வேண்டும்” என்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியதாவது: மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் சீர்குலைக்கிறது. இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்றார்.

இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில், உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டில் எங்கும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தூதரகம் அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவசரம் என்றால் அதற்காக கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை பயன்டுத்தலாம்:– +972–54520711+972–543278392, மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in இந்தியர்கள் யாரேனும் இன்னமும் தூதரகத்தில் பெயர்களை பதிவு செய்யவில்லை என்றால் https://forms.gle/ftp3DEXgJwH8XVRdA என்ற இணைப்பை பயன்படுத்திக் கொள்ளவும்’’ என்று கூறியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்கிறது

இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஈரான் ஏவுகணை தாக்குதலை துவக்கிய உடனேயே மேற்கத்திய நாடுகளின் எண்ணை சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 3% அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *