சிறுகதை

அடமானம் – ராஜா செல்லமுத்து

எங்கெங்கோ வேலை தேடிப் பார்த்தான் சுரேஷ். சரியான வேலை அமையாததால் எப்படி வாழப் போகிறோம் என்ற விரக்தியில் இருந்தான் சுரேஷ்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பணம் பற்றிய சிந்தனை தான் அவனை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது.

வேலை தேடிப் போகும் இடத்தில் எல்லாம் வேலை இல்லை. இப்போது ஆட்கள் எடுப்பதில்லை. எங்க கம்பெனில நிறைய ஆள் இருக்காங்க. உங்களை யாரு அனுப்பி விட்டார்கள்? இப்படி நிறையக் கேள்விகளைக் கேட்டு சுரேஷை அனுப்பி வைத்தார்கள்.

சொந்த வீடு இல்லாத காரணத்தால் வீட்டிற்கான மாத வாடகை. குடும்பத்திற்கான செலவுகள் இன்று ஒவ்வொரு மாதமும் செலவு அவர் நினைத்ததை விட அதிகமாகவே இருந்தது.

என்னங்க வீட்டு வாடகை கொடுக்கணும். தேதி 15 ஆயிடுச்சு ஹவுஸ் ஓனர் கத்திட்டு போறாங்க. பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ், டியூஷன் பீஸ் கட்டணும். வீட்டு செலவு இப்படி நிறைய இருக்கு என்ன பண்ணலாம் யோசிங்க என்று பேச்சிலேயே தழும்பு போட்டு போனாள் சுரேஷின் மனைவி .

அவள் கேட்டதற்கு எதுவும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

கடனும் கண் விழியை பிடுங்கும் அளவிற்கு இருந்தது. வேறு என்னதான் செய்வது? என்று யோசித்தான்.

இருசக்கர வாகனமும் இல்லாததால் வீட்டிலிருந்து தலைக்கு மேல் கனக்கும் கடனை நினைத்துக் கொண்டு சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்தான்.

அப்போது அவன் கண்ணில் பட்டது ஒரு போஸ்டர்.

அதுவும் அவனை சிந்திக்க வைத்த போஸ்டர். இந்த ஒரு போஸ்டர் போதும். நம்ம வாழ்க்கையை மாத்தி போடலாம் என்று நினைத்தான்.

அப்படி என்னதான் அந்த போஸ்டரில் இருந்தது .

அடமானம் டூ வீலர், ஃபோர் வீலர் என்று ஒரு செல் நம்பர் மட்டும் தான் போட்டு இருந்தது. அதற்கு மேல் அந்த போஸ்டரில் வேறு எதுவும் இல்லை.

சிரித்துக் கொண்டே அந்த போஸ்டர் ஓனரின் இடத்தை கண்டுபிடித்த சுரேஷ் அன்று இரவே அந்த போஸ்டரில் இருந்த நம்பருக்கு போன் செய்தான்.

சார் எங்கிட்ட இரண்டு வண்டி இருக்கு; குடும்ப கஷ்டம் .வேற வழி இல்ல .உங்க போஸ்டர் பார்த்தேன் என்கிட்ட கைல பணமும் இல்லை; பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல. பைக்கு வச்சிட்டு பணம் தர முடியுமா? என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கேட்டான் சுரேஷ் .

அதுக்கு என்னங்க; பைக் எடுத்துட்டு வாங்க என்று சொன்னான் அடமானம் வாங்குபவன்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் அடமானம் வைப்பவர் வீட்டுக்கு சென்றான் .

சுரேஷ் இரண்டு பைக்களையும் கொடுத்து பணம் கேட்டான்.

ஆர்சி புக், லைசன்ஸ் என்று சுரேஷ் தொலைத்தெடுத்தான் பணம் கொடுப்பவன்.

அதெல்லாம் எதுவும் இல்லைங்க; நீங்க அந்த பைக்கு அடமானம் வச்சிட்டு காசு கொடுத்தா போயிடுவேன் என்றான்.

சிரித்துக் கொண்டே அடமானம் கொடுப்பவன் சொன்னான்

தம்பி உன்ன விட நான் பெரிய கில்லாடி. இந்த ரெண்டு பைக்கை எங்க திருடுனெ என்று கேட்டான்.

இல்ல சொந்த வண்டி என்று சமாளித்தான் சுரேஷ்.

எனக்கு தெரியும்பா ?உண்மையை சொல்லு .எங்க திருடுன? என்று கேட்டபோது திருடியதை ஒத்துக் கொண்டான் சுரேஷ்.

திருடுறது தப்பு இல்ல தம்பி. உன்னுடைய தேவைக்கு பணம் வேணும்; அந்த பணத்துக்கு சும்மா இருக்கிற வண்டி பணம் சம்பாதித்து கொடுக்குது . உன்னோட சைடுல இருந்து பார்த்தா நியாயமானதா தெரியுது. அதனால இந்த ரெண்டு பைக்கும் அடமானம் இல்லை விலக்கே வாங்கிக்கிறேன். இதுல இருக்கிற ஸ்பேர் பார்ட்ஸ் எடுத்து வேற வண்டிக்கு நான் உபயோகப்படுத்துகிறேன் என்று அந்த இரண்டு இரு சக்கர வாகனத்திற்கு சேர்த்து ஒரு கணிசமான தொகையை கையில் திணித்தான் அடமானம் வாங்குபவன்.

சுரேஷிற்கு மகிழ்ச்சி தலைக்கு மேல் இருந்தது.

மறுபடியும் சுரேஷை கூப்பிட்ட அந்த அடமானக்காரன் இன்னும் என்னென்ன இருக்கிறதாே காெண்டு வா நான் வாங்கிக்கிட்டு பணம் போட்டு தரேன்.

ஆனா இது பத்தி போலீஸ் எந்த பிரச்சன வந்தாலும் என்னை நீ காட்டிக் கொடுக்கக் கூடாது.

நீ கொண்டு வர்ற பொருளை நான் நிச்சயமா விலை கொடுத்து வாங்கிக்கிறேன் என்று சொன்னான் அடமானம் வாங்குபவன்.

இதுதான் சரியான தருணம் என்று சிரித்தபடியே அடுத்த வேட்டைக்கு தயாரான சுரேஷ்

அன்று இரவு இரண்டு இரு சக்கர வாகனங்கள்,ஒரு கார் என்று திருடினான்.

அவன் நுழைந்த வீடு. திருடப்பட்ட கார் இருசக்கர வாகனம், கார் எல்லாம் அடமானம் வாங்குபவனின் வாகனங்கள் தான் என்பது சுரேஷிற்கு தெரிய வாய்ப்பு இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *