சென்னை, ஏப்.1-
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை வாசிக்கப்பட்டது. அந்த உரையில், ‘அடக்குமுறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறு இல்லை’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவரது உரையை வாசித்தார்.
அந்த உரையில் கூறியிருப்பதாவது:-
தனக்கு எதிராக ‘இந்தியா’ என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்தது முதல் நிலைகொள்ளாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பாரதீய ஜனதா தலைமை.
‘இந்தியா’ என்ற பெயரே அவர்களுக்கு கசப்பானதாக மாறியது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஏதோ இந்த நாட்டின் எதிரிகளைப் போல நடத்தத் தொடங்கினர். பாரதீய ஜனதா அல்லாத மாநிலங்களை ஆளும் அரசுகளை, மிகமோசமாக நடத்தினார்கள். ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, எம்.எல்.ஏ.க்களை இழுப்பது என அனைத்து இழிவான செயல்களையும் செய்தார்கள்.
அதன்பிறகு, சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பாரதீய ஜனதாவில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும். ஆனால் பாரதீய ஜனதாவின் ஆணவங்களுக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதைப் போல இருக்கிறது.
ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவர்கள். இவர்களைக் கைது செய்வதன் மூலமாக ‘இந்தியா’ கூட்டணியை குலைத்துவிட முடியாது. இது போன்ற கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் அனைத்தும் ‘இந்தியா’ கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்க சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாக கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது மூலம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களை மிரட்டிப் பார்க்க நினைத்தால் பிரதமர் மோடி ஏமாந்து போவார். நாடு முழுவதும் நடக்கும் அனைத்து அசைவுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அடக்குமுறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறு இல்லை.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் உறுதியுடன் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் வந்தால், இப்போது இருக்கும் இந்தியாவின் ஜனநாயக – அரசியலமைப்புச் சட்டப்பண்புகள் வேரோடு சாய்க்கப்படும் என்பதை பரப்புரை செய்யுங்கள். ‘இந்தியா ‘ கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். பல்வேறு மாநிலங்களில் அணிச் சேர்க்கை மிக நல்லபடியாக நடந்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் மாநிலங்களில் விரைந்து முடித்துவிட்டு பரப்புரைகளை தொடங்குங்கள்.
மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும் தான் பா.ஜனதா ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும். ‘இந்தியா’ கூட்டணியை வலிமைப்படுத்தவும், இந்தியாவை செழுமைப்படுத்தவும் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வருவார். இவ்வாறு அந்த உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.