தேர்தல் ஆணையத்துக்கு சரத்பவார் மனு
மும்பை, செப். 9–
சரத் பவார் தனது அண்ணன் மகன் அஜித் பவார் உட்பட 40 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனின் மனு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையில் ஜூலை தொடக்கத்தில் இரண்டாக உடைந்தது. அஜித் பவாரும், அவரது ஆதரவாளர்கள் 8 பேரும் திடீரென ஜூலை 2-ம் தேதி மாலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அஜித் பவார் தங்களது அணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தங்களுக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் மனுவும் கொடுத்துள்ளார்.
அஜித் பவார் கடந்த ஜூன் 30-ம் தேதி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி இருந்த கடிதத்தில் கட்சி கூட்டத்தில் சரத் பவாருக்கு பதில் தலைவராக அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், எனவே அவரை தலைவராக அறிவித்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அஜித் பவார் மற்றும் சரத் பவார் தரப்புக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
சரத்பவார் கடிதம்
இந்நிலையில், தற்போது சரத் பவார், தேர்தல் கமிஷனுக்கு ஒரு 500 பக்கம் கொண்ட பதிலை அனுப்பி உள்ளார். அதில் அஜித் பவார் உட்பட 9 அமைச்சர்கள் மற்றும் 31 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கவேண்டும். மேலும் அஜித் பவார் அணி தாக்கல் செய்த ஆவணங்களை நிராகரிக்க வேண்டும். சின்னம் தொடர்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்தது என்பதை அஜித் பவார் நிரூபிக்கவில்லை.தேர்தல் ஆணையமும் எந்த வித பிரச்னையும் இருப்பதாக முடிவு செய்யவில்லை என்றும் சரத் பவார் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த வித பிளவும் ஏற்படவில்லை. 40 பேரும் கட்சி விரோத செயலில் ஈடுபட்டு இருப்பதால் அவர்களின் பதவியை 10-வது சட்டப்பிரிவின் கீழ் பறிக்க வேண்டும் என்று சரத் பவார் அணி தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.