தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம்: சுப்ரியா சுலே
மும்பை, பிப். 07–
அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் என சுப்ரியா சுலே கூறி உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய அஜித் பவார், தன் ஆதரவாளர்களுடன் திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தார். பின்னர், அங்கு துணை முதல்வராக பதவியேற்றார். மேலும், தன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தார். இது, மகாராஷ்ட்ரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியது.
ஆனால், சரத் பவாரோ இந்தியா கூட்டணியில் உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் அணியினரும், அஜித் பவார் அணியினரும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி வந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அறிவித்துள்ளது. கட்சியின் சின்னமான சுவர் கடிகாரத்தையும் அஜித் பவார் தலைமையிலான அணிக்கு ஒதுக்கியுள்ளது.
3 பெயர்களை பரிந்துரைக்கலாம்
அதேவேளை நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தனது பிரிவுக்கு புதிய பெயர் வைக்க தேர்தல் ஆணையம் சரத்பவாருக்கு இன்று மாலை வரை வாய்ப்பை வழங்கியுள்ளது. இன்று மாலை 4 மணிக்குள் 3 பெயர்களை வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து சரத் பவாரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே கூறுகையில், “சரத்பவார் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவார். தொண்டர்கள் இன்னும் அவருடன் தான் இருக்கின்றனர். எங்கள் ஆவணங்கள் சரியாக இருந்தன. இக்கட்சியின் நிறுவன உறுப்பினர், நிறுவனத் தலைவர் எல்லாம் சரத்பவார் மட்டும் தான். ஆனால், இதையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத சக்தி செய்து வருகிறது.
நாங்கள் இரு விஷயங்களை மேற்கொள்ளப்போகிறோம். அடுத்த 48 மணி நேரத்திற்குள் நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம். இரண்டாவதாக இன்று மாலைக்குள் மூன்று கட்சிப் பெயர்கள், மூன்று சின்னங்களை பரிந்துரைக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பை கொடுத்துள்ளது. அதையும் நாங்கள் செய்ய உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.