மும்பை, நவ. 22–
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத்பவார் மற்றும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட தொகுதிகளில் மட்டும் அதிக அளவாக 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி நிலவியது. இத்தேர்தலில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்டு அணிகளாக போட்டியிட்டன. இதையடுத்து போட்டியும் கடுமையாக இருந்தது. அதுவும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மோதிக்கொண்ட மேற்கு மகாராஷ்டிராவில் இப்போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.
70 % கடந்த வாக்கு
மகாராஷ்டிரா முழுக்க சராகரியாக 66 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால், சரத்பவார் மற்றும் அஜித்பவார் அணிகள் நேருக்கு மோதிக்கொண்ட 38 தொகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதுவும் காகல் தொகுதியில் 81 சதவீதம் அளவுக்கு வாக்குப் பதிவாகி இருக்கிறது.
இது குறித்து அரசியல் பார்வையாளர் பிரகாஷ் பவார் கூறுகையில், ”தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு இரு கட்சி நிர்வாகிகளும் அதிக வாக்குப் பதிவாக வேண்டும் என்பதற்காக தீவிரமாக பாடுபட்டுள்ளனர். இரு கட்சி நிர்வாகிகளும் ஒவ்வொரு பகுதியிலும் தங்களது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக வேலை செய்துள்ளனர்.
இதற்கு முன்பு பவார் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் இம்முறை சரத்பவார் மற்றும் அஜித்பவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பிரசாரம் செய்ததை பார்க்க முடிந்தது. இதனால் வாக்கு சதவீதமும் அதிகரித்து இருக்கிறது.
மேற்கு மகாராஷ்டிரா முழுக்க சர்க்கரை ஆலைகளும், கரும்புத் தோட்டங்களும் நிறைந்து இருக்கிறது. இதனை சரத்பவாரிடமிருந்து கைப்பற்ற பா.ஜ.க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் முடியவில்லை. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து அதன் மூலம் படிப்படியாக மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை சாம்ராஜ்ஜியத்தை தனது கட்டுக்குள் கொண்டு வர பா.ஜ.க முயற்சிக்கிறது. அம்முயிற்சி கைகொடுக்குமா என்பது நாளை தெரிய வரும்.