நாடும் நடப்பும்

அச்சுறுத்தும் துப்பாக்கி கலாச்சாரம்


ஆர். முத்துக்குமார்


அமெரிக்காவில் தொடரும் பள்ளி வளாக தீவிரவாதம் நெஞ்சு படபடப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் பள்ளிப் பெயர், இறந்த மாணவர்களின் எண்ணிக்கை, தவிர மீதம் அதே தகவல்கள் தான் காண முடிகிறது.

தொடரும் இச்சோக செய்திகளில் மடிந்துள்ள இளம் மாணவர்களின் குடும்பத்தாரின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் சோகத்தில் நம் கண்கள் ஈரமாகிறது.

நேற்று அமெரிக்காவின் டெக்சாசில் யுவால்டே நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகியுள்ளனர். அதில் ஒரு ஆசிரியையும் அடங்கும். இவர் பெயர் ஈவா மிரெலெஸ், 4ம் வகுப்புக்கு பாடம் எடுப்பவர். இவரது மகள் கல்லூரி மாணவி ஆவார்.

18 வயது மதிக்கத்தக்க சிறுவன் துப்பாக்கி ஏந்தி முதலில் தனது பாட்டியை சுட்டு கொன்ற பிறகு சுமார் 11.30 மணி அளவில் இப்பள்ளிக்குள் மூர்க்கத்தனமாக அப்பாவி பள்ளி மாணவர்களை சுட்டு வீழ்த்தி உள்ளான்.

சில நிமிடங்களில் ஆயுதப்படை போலீஸ் இவனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட கலவரத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளான்.

இவனைப் பற்றிய முழு தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. ஆனால் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவன் என்பதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் மறைந்த இளம் சிறுவர், சிறுமியரின் கனவுகள் அந்த ஒரு நொடியில் சிதைந்து விட்டது. இந்த கொடூரச் செய்தியை அவர்களது பெற்றோர் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?

10 நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு நெஞ்சை உருக்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. இப்படித் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பல சக மாணவர்களின் முன்னிலையில் தான் நடக்கிறது.

அப்படி ஒரு கொடூரச் சம்பவத்தை பார்த்தவர்கள் வாழ்நாள் முழுவதும் அச்சோக நினைவுகள் நிழலாட வாழ்ந்தாக வேண்டும் என்பதும் மிகப்பெரிய தண்டனையாகும்.

இப்படி அன்றாட நிகழ்வாகவே உருவாகியுள்ள பள்ளி வளாக துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களின் நிலையில் இது ஏன்? எதற்கு? என்று கேட்டு பதிலை பெற முடியாதபடி பல நேரங்களில் சுட்டுக் கொள்ளப்படுவதால் உண்மையான தகவல் கிடைப்பதில்லை.

பொதுவாக இப்படி நடைபெறும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் மனநிலை சரியின்றி இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகி ஒருகட்டத்தில் விரக்தியில் துப்பாக்கியை தனது சக மாணவர்களை சுட்டுக் கொள்ள முற்பட்டு இருப்பார்.

ஆனால் அந்த இளம் வயதில் துப்பாக்கியை பெற்று விட அமெரிக்காவின் ஜனநாயகத்தில் இடம் உள்ளது.

வீட்டில் உள்ளவர் எளிதில் துப்பாக்கி வாங்கி பாதுகாப்பு காரணங்களுக்கும் பாதுகாப்புக்கும் வாங்கி வைத்திருப்பார்கள்.

அந்தத் துப்பாக்கியை எளிதில் சிறுவர்களால் எடுத்துச் சென்று விட முடியும்!

அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் பல்வேறு எதிர்ப்புகள் இருந்தும் தனி நபர் சுதந்திரம் என்பதாகக் கூறி அந்தக் கலாச்சாரத்தை தடுக்க முடியாமல் அமெரிக்க அரசும் தவிக்கிறது.

துப்பாக்கிக் கலாச்சாரத்தை அமெரிக்கா விரும்ப காரணம் என்ன? வளர்ந்த நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் தடை செய்யப்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா அதுபற்றி அக்கறையின்றி இருப்பதை பார்க்க முடிகிறது.

நாள் ஒன்றுக்கு 53 பேர் படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்க போலீஸ் அறிக்கை கூறுகிறது. அதில் 75% துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டவனின் அமெரிக்காவில் இப்படி ஒருவரால் பலர் சுட்டுக் கொல்லப்படும் நிகழ்வு 400 நடைபெற்று இருக்கிறது. இந்த நினைவுகளில் அதிகம் பேர் இறந்தது 2017–ல் லாஸ் வேகசில் நடைபெற்ற சம்பவத்தில் தான், அதில் 50 பேர் பலியானார்கள். 100 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.

இப்படி நடைபெறும் ‘ குவியல்’ சுட்டுக் கொல்லப்படுவதில் 20 பேராவது சாவது 50 சம்பவங்களில் இருக்கிறது.

இந்த சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க துப்பாக்கி கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவில் சட்டத்திருத்தம் மிக அவசியம் தேவைப்படுகிறது. அந்த முடிவில் தான் இறந்த சிறு பிள்ளைகளுக்கு உரிய அஞ்சலியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.