அரசியல் சாசனத்திற்கு விரோதமாக கவர்னர் செயல்படுகிறார்: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
சென்னை, ஜன.6–
அச்சிடப்பட்ட கவர்னர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும், கவர்னர் உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்து முடித்தார். இந்த நிலையில் அச்சிடப்பட்ட கவர்னர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவை முன்னவர், தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில் குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை எப்போதும் அதன் மரபை பின்பற்றி வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
மேலும், அச்சிடப்படாதவை அவைக் குறிப்பில் இடம்பெறாது எனவும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் கொடுத்தார். அரசியல் சாசனத்திற்கு விரோதமாக
கவர்னர் செயல்படுகிறார்
சட்டசபையிலிருந்து இருந்து கவர்னர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து சட்டசபையில் அவர் பேசியதாவது:–
சபையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் கவர்னர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. கவர்னர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை. முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் சென்றுள்ளார். கவர்னர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என சபாநயாகர் அப்பாவு, கடந்த ஆண்டே கவர்னருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை கவர்னர் கூறி வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது என்றார்.