அலுவலகப் பணியின் இடைவேளையில் காலாற நடந்து போய் காபி குடித்துவிட்டு வருவது ராகவனுக்குப் பிடித்தமான ஒன்று. அப்படி ஒரு நடந்து போகும்போது எதிர்படும் மனிதர்களை எல்லாம் பார்த்து பேசி விட்டு தான் செல்வார். அவர்களுடைய சில தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டுச் செல்வது வழக்கம். பெரியவர், சிறியவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அத்தனை பேருடனும் பழகும் அவரின் பண்பு எல்லோருக்கும் பிடிக்கும்.
அதனால் அவர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தால், இறுக்கமான முகத்துடன் இறுமாப்பாக இல்லாமல் சில பேருடன் பேசி விட்டுத் தான் செல்வார் .
அப்படி ஒரு நாள்…
அலுவலகத்தை விட்டு கீழே இறங்கி வந்த போது நடைபாதையில் மாம்பழம் விற்றுக் கொண்டிருக்கும் அந்த பெரியவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அரக்கப் பரக்க ஓடி வந்த ஒருவர்
” ஐயா இங்கே நல்ல நான்வெஜ் கடை எங்க இருக்கு ? என்று கேட்க
” ரோட்டுக்கு அந்த பக்கம் போனீங்கன்னா ஒரு நல்ல பிரியாணி கடை இருக்கு. அங்க சாப்பிடலாம். ரோட்டுக்கு இந்த பக்கம் போனீங்கன்னா, ஆந்திரா மெஸ் இருக்கு. அங்கேயும் சாப்பிடலாம். ஸ்ட்ரெயிட்டா போனீங்கன்னா, இன்னொரு அசைவ கடை இருக்குது. அங்கேயும் சாப்பிடலாம். உங்களுக்கு எந்தக் கடை சௌகரியப்படுதோ அங்க சாப்பிடலாம்” என்று அத்தனை கடைகளில் பெயரையும் கவிதையாக ஒப்பித்தார் ராகவன்.
அந்த வழிப்போக்கன் இன்னும் இன்னும் வேறு கடைகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார்.
” இதற்கு மேல் இங்கு அசைவ கடைகள் இல்லை” என்று ராகவன் சொல்லவும்
“ரொம்ப நன்றிங்க. கடைகள் பெயர இவ்வளவு அழகா சொல்றீங்களே? எப்படி இது உங்களுக்கெல்லாம் தெரியும் . அந்த கடையில எல்லாம் சாப்பிட்டு இருக்கீங்களா? எந்தக் கடையில ருசி எப்படி இருக்கும்? நீங்க சொன்ன மொத்த கடைகள்ல எந்த கடையில சாப்பிட்டா நல்ல ருசி அதிகமா இருக்குன்னு சொன்னா ,அங்க போய் சாப்பிட வசதியா இருக்கும். நாங்க குடும்பத்தோட வந்து இருக்கோம். வெளியூரு. எங்களுக்கு எந்தக் கடை எப்படி இருக்குனு தெரியாது” என்று சிரித்துக் கொண்டே கேட்ட அந்த வழிப்போக்கனிடம்
“ஐயா எனக்கு கடையோட பேர் மட்டும் தான் தெரியுமே ஒழிய அங்க நான் சாப்பிட்டதெல்லாம் கிடையாது. நான் நான்வெஜ் என்று ராகவன் சொல்ல
” ஐயா நான்வெஜ்கடைதான் நானும் கேட்டேன். அதைத்தான் அவ்வளவு அழகா அடுக்கி சொல்லிட்டீங்களே? இதுக்கு மேல என்ன ஐயா வேணும் ?இந்த ஹோட்டலில் எந்த ஹோட்டல் அசைவ உணவு நல்லா இருக்குன்னு சொன்னீங்கன்னா அப்படியே நாங்க போய் சாப்பிட வசதியா இருக்கும் ” என்று சொல்ல தர்ம சங்கடத்தில் நெளிந்த ராகவன்
“ஐயா நான்வெஜ்” என்று மறுபடியும் சொன்னார்
“அதுதான்யா நானும் சொல்றேன்” என்று கேட்க
இவரிடம் நாம் இப்படி சொல்வது சரிப்பட்டு வராது போல என்று நினைத்த ராகவன் தலையை சொரிந்து கொண்டே
” ஐயா நான் அசைவ உணவு சாப்பிடுறது இல்லை. சைவம் தான் சாப்பிடுவேன். ஏதோ நீங்க கேட்டீங்க அப்படிங்க றதுக்காக அத்தனை கடைகளையும் சொன்னேன் . எந்த கடையில எந்த அசைவ உணவு நல்லா இருக்கும்னு எனக்குத் தெரியாது. நீங்களே தேர்ந்தெடுத்துக்கோங்க ” என்று நடையை கட்டினார் ராகவன்
அசைவ உணவே சாப்பிடாத ராகவன் அசைவ உணவைக் கடைகளில் பெயரை அவ்வளவு கச்சிதமாக வழிபோக்கனுக்கு எடுத்துச் சொன்னார். ராகவனின் பண்பு பாராட்டுக்குரியது” என்று நினைத்த அந்த மாம்பழ வியாபாரி தன்னையும் மறந்து சிரித்துக் கொண்டார்.
#சிறுகதை