செய்திகள்

அசைவப் பூச்செடிகள்…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

வீட்டின் மாடி முழுவதும் நிறைந்து கிடக்கும் பூத்தொட்டிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி கொண்டிருப்பான் கிருஷ்ணன்.

வித விதமான பூக்கள் பூத்துக் கிடக்கும் அந்த மொட்டை மாடியில் சின்னதாக இரண்டு பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பியும் வைப்பான். அந்தத் தண்ணீரைத் தேடி காகம், குருவிகள் வந்து தண்ணீர் குடித்துச் செல்லும். காலையில் ஊற்றி வைக்கும் தண்ணீர் மறுநாள் காலை வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரம் கீழே கவிழ்க்கப்பட்டுக் கிடக்கும்; தண்ணீர் இருக்காது.

யார் இதைச் செய்வது? உயிரினத்திற்கு நாம் தண்ணீர் வைப்பது பாவமா? இதைச் செய்வது யார் ?.

என்று தினமும் குழம்பிப் போவான், கிருஷ்ணன். அலுவலகம் செல்வதற்கு முன்பாக அத்தனை செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றிவிட்டுச் சென்றால் தான் அவன் மனம் நிம்மதி அடையும். ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் காலையில் வைக்கும் தண்ணீர் மறுநாள் காலையில் கவிழ்க்கப்பட்டுக் குப்புறக் கிடக்கும். பகல் நேரங்களில் அவன் இல்லாததால் இதைச் செய்வது யார் ? என்று தெரியவில்லை. அவன் குடித்தனம் இருக்கும் வீட்டில் நிறைய குடும்பங்கள் இருந்ததால் யார் மீதும் அவன் சந்தேகப்பட முடியாத அளவிற்கு இருந்தது .இதைக் கேட்டால் தவறாகவும் முடியலாம்

என்று நினைத்து எதுவும் கேட்காமல் இருந்தான். ஆனால் அவனது மனம் மட்டும் யார் இதைச் செய்வது? என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தது.

ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டுச் செல்லும்போது நிச்சயம் இன்றும் தண்ணீர் கொட்டப்பட்டு பாத்திரம் கவிழ்க்கப்பட்டிருக்கும் நினைத்து கொண்டு இருந்தான். மறுநாளும் அதே நிலைதான். இன்று ஒரு நாள் விடுமுறை பாேட்டு இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தான் . அவன் தண்ணீர் வைக்காத நேரங்களில் கூட அவன் வீட்டு வாசலில் பறவைகள் வந்து கத்திக் கொண்டிருக்கும். அன்று விடுமுறை போட்டு விட்டு காலையில் எழுந்து தண்ணீர் வைத்துவிட்டு அமைதியாக இருந்தான். மொட்டை மாடிக்கு யார் போகிறார்கள் ? என்பதை பார்த்துக் கொண்டிருந்தான். கீழே இருக்கும் வீட்டுக்காரர்கள் எல்லாம் மேலே போய் துணி காய போடுவதும் வடகம் காய வைப்பதும் சிறுவர்கள் மேலே சென்று கீழே வருவதுமாக இருந்தார்கள். ஆனால் அன்று தண்ணீர் எதுவும் கொட்டப்படவில்லை.

“அப்படி என்றால் யார் இந்தத் தண்ணீர் பாத்திரத்தைக் கவிழ்ப்பது? யார் தண்ணீரைக் கீழே கொட்டுவது?” என்று அவனுக்குக் கவலையாக இருந்தது. அன்று வயிறாரத் தண்ணீர் குடித்துச் சென்றன பறவைகள் .

அன்று மாலை வரை பாத்திரம் கவிழ்க்கப்படவில்லை. தண்ணீர் கீழே கொட்டப்படவில்லை. பிறகு யார் இதை செய்வது? என்று அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மறுநாள் காலை போய் பார்த்தான். தண்ணீர் பாத்திரம் அப்படியே நிரம்பி இருந்தது.பழைய தண்ணீரைக் கவிழ்த்து விட்டு புதிய தண்ணீரை நிரப்பி வைத்தான். இன்று நிச்சயம் அலுவலகம் செல்லலாம் .யாரும் இனி தண்ணீரைக் கவிழ்க்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

அன்று தண்ணீர் நிரப்பி விட்டு அலுவலகம் சென்றான். இரவு திரும்பி வந்து மொட்டை மாடியில் பார்த்தபோது, தண்ணீர் பாத்திரம் கழுவிக்கப்பட்டு தண்ணீர் கொட்டப்பட்டிருந்தது . அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது .

இன்று என்ன ஆனாலும் பரவாயில்லை . யாராக இருந்தாலும் திட்டி விடுவது என்று முடிவு செய்தான்.

” இந்த வீட்ல குடி இருக்கிற எல்லாருக்கும் சொல்றேன் மேல நான் தண்ணி வைக்கிறது பறவைகளுக்கு. ஆனா யாரோ நீங்க அதை தவறாக புரிஞ்சுக்கிட்டு தண்ணீய கொட்டிட்டு பாத்திரத்தை கவுத்து வைக்கிறீங்க? இது தப்பு .இத யார் செய்றது ?என்று கேட்டான் .யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. அந்த வீட்டின் உரிமையாளர் வந்தார்

“தம்பி இங்க என்ன பிரச்சனை? என்று கேட்டார்.

“ஐயா தினமும் நான் மாடியில பறவைகளுக்கு தண்ணீர் வைக்கிறேன். ஆனா யாரோ அத கொட்டிட்டு பாத்திரத்த கவுத்து வைக்கிறாங்க. இது எதுக்குன்னு தெரியல. நான் பறவைகளுக்கு தானே தண்ணீர் வைக்கிறேன். இது பாவமா?”

” தம்பி நான் கூட தண்ணி வைக்கிறது வேற யாரோன்னு நினைச்சேன் . நீங்க தானா? அந்த பாத்திரத்தை கவுத்தி விட்டு தண்ணீர் கொட்டி விடுறது நான் தான் ” என்றார்

“என்ன சார் எப்பவும் கருணைய பத்தி பேசுவீங்க. ஆனா இப்ப இத சாதாரண சொல்றீங்களே? என்ன ஆச்சு ?என்று கேள்வியாய் கேட்டான்.

” தம்பி, நீங்க தண்ணி வச்சிட்டு போயிடுறீங்க .ஆனா காக்கா குருவி எல்லாம் தண்ணிய குடிச்சிட்டு பேசாம போறதில்ல . இதுல குறிப்பா காக்கா ஏதாவது அசைவ பொருளத் தூக்கிட்டு வந்து மாடியில போட்டுட்டு பாேயிருது. இதனால எங்களுக்கு ரொம்ப பிரச்சனை ஏற்படுது. நாங்களே சைவம் சாப்பிடுறவங்க . அசைவம் மாடியில கிடந்தா நல்லா இருக்கா என்ன? அதுதான் நான் தண்ணிய கொட்டி வைக்கிறேன்” என்றார் அந்த வீட்டில் உரிமையாளர்.

” ஐயா அந்த காகம் அசைவத்தை தூக்கிட்டு வந்து போடுதுன்னு நீங்க மொட்டை மாடியில இருக்கிற தண்ணிய கவுத்தி விடுறீங்க? உங்க வீட்டுல குடி இருக்கிறவங்க எல்லாம் அசைவம் சாப்பிட்டு எலும்பெல்லாம் வெளிய போடுறாங்களே? அத என்ன செய்வீங்க? உணவுங்கிறது ஒவ்வொரு மனிதனுடைய விருப்பம். ஒவ்வொரு உயிரோட விருப்பம். நாம அத ஒன்னும் செய்ய முடியாது. நம்ம முடிஞ்சா உதவி செய்யணும். .இல்ல விட்றணும் .நீங்க செய்றது தப்புன்னு நினைக்கிறேன்”

என்றான் கிருஷ்ணன்.

அவன் பேசுவதை எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த வீட்டு உரிமையாளர் .

மறுநாள் காலை, மொட்டை மாடிக்குச் சென்றான் கிருஷ்ணன். அவன் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு முன்பாகவே பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.

யார் இதை செய்தது ?என்று திரும்பி பார்த்தான் அங்கு சிரித்தபடி நின்று கொண்டிருந்தார் வீட்டின் உரிமையாளர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *