கனமழை தொடரும்–இந்திய வானிலை மையம்
திஸ்பூர், ஜூலை 4–
அசாம் கனமழைக்கு 46 பேர் பலியான நிலையில், 16 லட்சம் பேர் பாதிப்படைந்து தவிக்கும் சூழலில், கனமழை இன்றும் தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அசாம் மாநிலத்தில் கொட்டும் மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
16 லட்சம் பேர் பாதிப்பு
நேற்றைய நிலவரப்படி 29 மாவட்டங்களில் உள்ள 2800 கிராமங்களில் மொத்தம் 16.25 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அசாமில் உள்ள நாகோன் மற்றும் தர்ராங் மற்றும் பராக் பள்ளத்தாக்கில் உள்ள கரீம்கஞ்ச் ஆகிய மாவட்டங்கள் தொடர் அதி கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொட்டித் தீர்க்கும் பலத்த மழையால் காசிரங்கா பூங்கா 80 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளின் வெள்ளப்பெருக்கு காரணமாக 28 மாவட்டங்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இன்றும் நாளையும் அதி கனமழை தொடரும் என்றும் வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதி மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அசாம், மேகாலயா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் மேற்கு வங்கம், பீகார், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் மணிப்பூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.