கவுகாத்தி, பிப்.5-
அசாமில் மத்திய–மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் ரூ.11,600 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பணி முடித்த திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது.
கவுகாத்தி அருகே உள்ள கனபரா கால்நடை மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பணி முடித்த திட்டங்களை தொடங்கியும் வைத்தார். இதையொட்டி நடந்த பிரமாண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது மத்தியில் ஆட்சியமைத்திருந்த முந்தைய அரசுகளை அவர் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அசாமில் தொடங்கப்பட்டுள்ள இந்த வளர்ச்சி திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களின் இணைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவின் இணைப்பையும் உறுதிப்படுத்தும்.
கடந்த 10 ஆண்டுகளாக அசாமில் அமைதி திரும்பி இருக்கிறது. 7 ஆயிரத்துக்கு அதிகமான கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு பிரதான தேசிய நீரோட்டத்துக்கு திரும்பி உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தில் சாதனை அளவான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிகாரத்துக்கு வந்த ஆட்சியாளர்களால் வழிபாட்டு தலங்களின் முக்கியத்துவத்தை உணர முடியவில்லை. அவர்கள் தங்கள் சொந்த கலாச்சாரத்தை எண்ணியே வெட்கப்பட்டனர். எந்த நாடும் தனது கடந்த காலத்தை அழித்து விட்டு முன்னேற முடியாது.
ஆனால் தற்போது கடந்த 10 ஆண்டுகளாக நிலைமை முற்றிலும் மாறி விட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த விழாவில் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநில அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.