கவுகாத்தி, பிப். 4–
அசாமில் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2044 பேர், ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாமில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பெண்களுக்கு உரிய வயதிற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டுவந்து முதலமைச்சர் ஹிமந்தா தலைமையிலான அரசு.
அதன்படி, 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் எனவும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பாயும் என அசாம் அரசு சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
2044 பேர் கைது
இந்த புதிய உத்தரவின் பேரில் அசாம் காவல் துறை மாநிலம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 18 குறைவான பெண்களை திருமணம் செய்தவர்கள் மீது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 24 மணிநேரத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமணம் நடத்தி வைத்த புரோகிதர், இஸ்லாமிய மதகுரு உள்ளிட்ட 52 பேரும் இந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 2,044 பேர் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் ஆகியவை போடப்பட்டுள்ளன.
தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் தரவுகளின் படி அசாமில் 20-24 கொண்ட பெண்களில் 32 சதவீதம் பேருக்கு 18 வயதுக்கு குறைவாக இருக்கும் போது திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் 12 சதவீதம் பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே கருத்தரிப்புக்கு ஆளாகிறார்கள் என சர்வே புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.