செய்திகள்

அசாமில் இன்று காலையில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கவுகாத்தி, ஏப். 28–

அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு பலத்த நிலநடுக்கம் இன்று காலை 7.51 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சோனித்பூர் நகர். அங்கு இன்று காலை 7.51 மணி அளவில் 6.4 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பலத்த அதிர்வு உணரப்பட்டது என்றும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவுக்கும், சாலைக்கும் வந்தனர் என்கிறார்கள்.

மேலும் 6.4 அளவிலான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 பின்னதிர்வுகள்

இன்று காலை 7.51 மணியளவில் 6.4 அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, நான்கு மிகப்பெரிய பின் அதிர்வுகள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, 8.03 மணியளவில் 4.7 ரிக்டர் அளவிலும், 8.13 மணிக்கு 4 ரிக்டர் அளவிலும், 8.25 மற்றும் 8.44 மணிக்கு இரண்டு முறை 3.6 ரிக்டர் அளவிலும் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இன்று காலையில் ஏற்பட்ட பெரிய அதிர்வும், நான்கு பின் அதிர்வுகளும் சோனித்பூரை மையமாக கொண்டே நிகழ்ந்துள்ளன. முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சோனித்பூரிலும், மேகாலயாவின் காசி மலையிலும் லேசான முன்னதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், அசாம் முதல்வர் சரபானந்த் சோனாவால், பெரிய நிலநடுக்கம், அசாமைத் தாக்கியுள்ளது. எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் நலனுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன் என கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் கவுகாத்தியின் பல இடங்களில், கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் அசாமில் இருந்து வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *