செய்திகள்

‘‘அக்னிபாத்’’ போராட்டம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடெல்லி, ஜூன் 18–

அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதுடெல்லி, ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. பல இடங்களில் வன்முறை வெடித்தது.

பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர். இதற்கிடையே, அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தை பற்றியும், தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் இத்திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்யவும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில், நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ரெயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.