பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி, பிப். 01–
அக்னிபாத் திட்டம், நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல, இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:–
‘ஆயுதப்படையில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்களை தற்காலிக ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுள்ளது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். அக்னிபத் திட்டம் நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம்
முன்னதாக, பிகார் மாநிலம், கதிகாரில் நேற்று தனது இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் போது ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ‘கடந்த 40-50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகமாக இருப்பதால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது’ என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பீகாரில் இருந்து மேற்குவங்கம் திரும்பிய ராகுல் காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.