செய்திகள்

அக்டோபர் 27–ந்தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு

Makkal Kural Official

நடிகர் விஜய் அறிவிப்பு

சென்னை, செப். 20–

அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கடந்த ஆகஸ்டு 22ந்தேதி கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து சேலம், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வருகிற 23-ந்தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையில் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபிடி போடப்பட்டதால், அதற்கான பணிகள் தொடங்காமல் இருந்தது.

இந்த நிலையில் 23ம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற காவல்துறையிடன் அனுமதி பெற்றும், மாநாடு தேதி மாற்றப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்.

இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம். வாகை சூடுவோம்”

இவ்வாறு நடிகர் விஜய் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும், ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *