புதுடெல்லி, நவ. 2
கடந்த அக்டோபர் மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் உள்நாட்டு விற்பனை அதிகரித்ததால் ஜி.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளது. இதனால் அக்டோபர் மாதம் 9 சதவீதம் அதிகரித்து ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.33,821 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.41,864 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஐ.ஜி.எஸ்.டி. ரூ.99,111 கோடியாகவும், செஸ் ரூ.12,550 கோடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 3 கோடி ஜி.எஸ்.டி. வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய வசூல் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் இந்த அக்டோபர் மாதம் மட்டும் ரூ.19,306 கோடி மதிப்பிலான ரீ–பண்ட்கள் வழங்கப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18.2 சதவீத வளர்ச்சியாகும். ரீ பண்ட் வழங்கப்பட்டதை கழித்துப்பார்த்தால் நிகர ஜி.எஸ்.டி. வசூல் 8 சதவீதம் அதிகரித்து ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது.
பொருளாதார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளதையும், அதிகமானோர் வரி செலுத்துவதையும் இது காட்டுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.