விறுவிறுப்பாக நடைபெறும் தூக்குப் பாலப் பணிகள்
ராமேஸ்வரம், ஆக. 17–
பாம்பன் பாலத்தில் அக்டோபர் மாதத்தில் ரெயில் போக்குவரத்து துவங்க உள்ள நிலையில், தூக்குப் பாலம் அமைக்கும் பணிகளை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பார்த்து செல்கின்றனர்.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கிலோ மீட்டரில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், 1.6 கிலோ மீட்டர் தூரத்திற்கான பாலம் பணி முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அக்டோபரில் துவக்கம்
இந்நிலையில், மீதமுள்ள 500 மீட்டர் தூரத்திற்கான பாலத்தின் நுழைவில் தூக்குப் பாலம் இணைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. தண்டவாளம் அமைக்கும் பணியும் நிறைவடைந்ததை அடுத்து ரெயில் இஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதையடுத்து ஊழியர்கள் அடுத்தடுத்த பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாலத்தில், நவீன தூக்கு இயந்திர இஞ்சின் மூலம் நடுக்கடலில் பணி நடைபெற்றது. பாம்பன் பாலத்தில் அக்டோபர் மாதம் ரெயில் ஓட்டம் துவங்க உள்ள நிலையில், பாலப் பணிகளை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.