அம்மா ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தற்போது அப்பாவும் இறந்து ஒரு மாதம் ஆகிறது…
இன்று அவர் நினைவாக சாமி கும்பிட அனைவரும் ஒன்று கூடிய இடத்தில் சொத்தை தம்பிக்கே எழுதி கொடுத்து விடலாம் என விவாதம் நடந்து கொண்டிருந்தது!
“சரி முதலில் அப்பாவிற்கு சாமி கும்பிடுகிற வேலையை பார்ப்போம்; பிறகு இதை பற்றி பேசுவோம்” என்றாள் அக்கா கண்ணம்மாள்..
உற்றார் உறவினர் படை சூழ திட்டமிட்ட படி அப்பாவின் நினைவு நாள் காரியம் நிறைவடைந்தது.
மாலை நேரம் நெருங்க நெருங்க நினைவு நாள் காரியத்திற்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று செல்ல,
இவர்களின் குடும்பம் மட்டுமே தனித்து இருந்தது.
மீண்டும் சொத்து பிரச்சனையே சரசுவதி எழுப்ப கண்ணம்மாள் வெகுண்டெழுந்தாள்.
“இப்ப அதுக்கென்ன அவசரம்”
“அக்கா,பால்ராஜ் இரண்டு புள்ளைகளை வைத்து கொண்டு ரொம்ப சிரமப்படுறான்! ஏற்கனவே கொஞ்சம் அவனுக்கு கடனும் இருக்கு.. இந்த மாதிரி நிலைமையில் அவனுக்கு நம்ம அப்பா சொத்தை எழுதி கொடுத்தால் அவனும் இந்த இரண்டு பிள்ளைகளை வைத்து காலம் தள்ளிடுவான்” என தம்பி பிள்ளைகளை கையில் இறுக்கி பிடித்தவாரே பரிதாபமாக சொன்னாள் சின்ன அக்கா சரசுவதி.
பால்ராஜூம் அவன் மனைவி சுமதியும் தூரத்தில் இருந்தே இவர்களின் பேச்சை உன்னிப்பாகக் கேட்டனர்.
“இங்க பாரு சரசு… இந்த இடம் 5 சென்ட் . இதோட இன்றைய மதிப்பு 25 இலட்சம்ரூபாய்! இப்ப எதுக்கு குமாருக்கு எழுதி தரலாம்னு கங்கணம் கட்டிகிட்டு நிற்கிறே! அப்படியே எழுதி தருவதாக இருந்தாலும் எனக்கு மூன்றில் ஒரு பங்கு கொடுத்தா நான் கையெழுத்து போடுவேன். இல்லையென்றால் இப்படியே இருக்கட்டும் பிறகு பார்க்கலாம்” என்றாள் கண்ணம்மாள்.
தன் அக்காவிடம் இருந்து இந்த மாதிரி பதிலை சற்றும் எதிர்பார்க்காத சரசு மெளனமாக நின்றாள்!
தொலைவில் இருந்த பால்ராஜுக்கும் சுமதிக்கும் தன் அக்காவின் செய்கை எரிச்சலூட்டியதை அவர்களின் முகபாவனை மாற்றங்கள் எடுத்து காட்டியது.
“சரி சரி எனக்கும் வீட்டுல நிறைய வேலை இருக்கு! பத்திரமாக பிள்ளைகளை பார்த்துக்கோ!” என தன் தம்பியை பால்ராஜை பார்த்து தெரிவித்து விட்டு, சரசு வர்றேன்!” என கண்ணம்மாள் தன் கைப்பை இரண்டையையும் எடுத்து கொண்டு தன் கணவருடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்!
“டேய் பால்ராஜ், அக்கா அக்கான்னு ரொம்ப பாசம் வைத்திருந்தியே அவளோட பேச்சை பார்த்தியா? நான் கூட வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்! நானே உனக்கு சொத்தை எழுதி தர்றேன்னு சொல்லுறேன்! அவ சொத்துல பங்கு கேட்கிறாள்! தம்பி சிரமத்தில் இருக்கான்னு கொஞ்சமாவது யோசிச்சாளா?” என ஏற்கனவே விரக்தியின் விளிம்பில் இருந்த பால்ராஜை தூண்டி விட்டாள்!
பால்ராஜ் என்ன சொல்வது என அறியாமல் அமைதியாக நின்றான்.
பேருந்து நிறுத்தத்தில் தன் மனைவியைப் பார்த்து “கண்ணம்மா நீ என்னதான் இருந்தாலும் இப்படி பேசியிருக்க கூடாது! பால்ராஜ் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? “
” எனக்கும் அந்த மாதிரி பேச மனம் கஷ்டமாகத்தான் இருந்துச்சு! என்ன பண்றது சுமதி கிட்ட பேசும் போது, பால்ராஜ் முன்ன மாதிரி ஒழுங்கா வேலைக்கு போறது இல்லை! தினமும் குடிச்சுட்டுதான் வீட்டுக்கு வருவதாகவும் அதே சமயம் ஊரை சுத்தி கடன் வாங்குவதாகவும் சொன்னாள்! இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை நம்பி மிகவும் வேதனைப்படுவதாகவும் புலம்பினாள்.
இந்த நிலமையில் நானும் சொத்தை அவன் பேருக்கு மாத்துவதற்கு சரியின்னு சொல்லியிருந்தா, சீக்கிரமாவே வித்து தின்னுடுவான்! நமக்கும் குழந்தை இல்லை. நமக்கு ஏற்கனவே ஏகப்பட்ட சொத்து இருக்கு! காலம் போன கடைசியில அந்த சொத்தும் என் கூடப்பிறந்தவங்களுக்கே. நான் ஏன் அந்த சொத்துக்கு ஆசைப்படறேன். அதனால தான் அந்த மாதிரி பேச வேண்டி இருந்ததை தன் கணவனிடம் கண்ணம்மாள் சொல்லிக் கொண்டிருப்பது கண்ணம்மாள் மறந்து வீட்டில் விட்டு சென்ற மூக்கு கண்ணாடியை கொடுக்க சென்ற சரசு காதில் விழுந்தது. அது தேனாறு பாய்வது போல் சரசுவுக்கு இனிமையாக இருந்தது.
அக்காவின் மனசு தங்கம்.