சிறுகதை

அக்கறை – ராஜா செல்லமுத்து

பார்க்கும் இடமெல்லாம் கானல் நீர் கதகதத்துக் கிடக்கும் வெப்ப வெளியில், எங்கு பார்த்தாலும் சூடு அப்பிக்கிடந்தது. சராசரி மனிதர்கள் எல்லாம் உஷ்ணம் உயர்ந்து உச்சத் தாயில் கோபத்தில் இருந்தார்கள். எதைத் தொட்டாலும் எது கேட்டாலும் பட்டென்று கோபம் வரும் இந்த கோடைகாலத்தில் யாருடன் பேசினாலும் விவாதமே முற்றும் என்று தெரிந்த சங்கர் அமைதியாகவே இருந்தான்..

கொஞ்சம் கோபக்காரன் தான் என்றாலும் இந்த வெப்ப மாதம் எல்லோருக்கும் வேறு மாதிரியான ஒரு மனநிலையை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்படும் சங்கர் கோடை காலங்களில் கோபத்தை அடக்கி வாசித்தான். இருந்தாலும் அவனையும் மீறி சில விஷயங்கள் நெற்றிப் பொட்டுக்கு ஏறி கோபம் கொள்ளச் செய்யும். அதை நாசி வழியாக வெளியே விட்டு சாதாரணமாகச் சிரித்துக் கொள்வான்.

நண்பர்கள் சங்கரின் நடவடிக்கைப் புரிந்து கொண்டு கால நிலைக்கு ஏற்ப மனநிலையை மாற்றிக் கொள்ளும் மகத்தான மனிதன் சங்கர் என்று அவனுக்குப் பட்டயம் கொடுப்பார்கள்.

அவனைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் அவனைப் போல் வாழ முடியாது என்று அவர்களாகவே சொல்லிக் கொள்வார்கள்.

அன்று அலுவலகம் முடிந்து பேருந்தில் ஏறி பயணப்பட்டபோது அந்த ஓட்டுநர் எதற்கு ஹாரன் அடிக்கிறான் என்பது தெரியாமல் இருந்தது. அவனுக்கு முன்னால் எந்த வாகனமும் செல்லவில்லை. ஆனால் ஹாரன் அடித்துக் கொண்டே போகிறானே ?எதற்கு என்று பயணிகள் முதல் சங்கர் வரை எல்லாரும் வருத்தப்பட்டார்கள்.இதைச் சொல்லலாம் என்று எத்தனித்த போது, மற்ற நண்பர்களிடமும் அந்தப் பயணிகளிடம் சங்கர் சொன்னான்.

வேண்டாங்க. உச்சி வெயில் மண்டையை பொளக்குற நேரத்தில இருந்து இந்த பஸ்ல உட்கார்ந்து காலைல இருந்து சாயங்கால வரைக்கும் பஸ் ஓட்டி ஓட்டி ஒரு மாதிரியான மனநிலையில இருப்பார் அந்த டிரைவர். ஏதோ அவருக்கு தோனியிருக்கு ஹாரன் அடிச்சிட்டு இருக்கார் .இதை யாரும் கேட்க வேண்டாம் என்று சண்டை போடுபவர்களைக் கூட ஆசுவாசப்படுத்தினான் சங்கர்.

சரி அது போகட்டும் என்றால், கொஞ்சம் கூட்டமாக இருக்கும் அந்தப் பேருந்தில் அரை போதையில் இருந்த ஒருவன் ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து

“அம்மா உங்களுக்கு யாரும் இடம் கொடுக்கலையா? என்று அந்த பெண்மணி இடம் கேட்க,

” இல்ல தம்பி பரவால்ல. நான் நின்னுக்கிட்டே வரேன் “என்று அந்த பெண்மணி சொன்னாள்.

சுற்று முற்றிலும் பார்த்த அந்த அரைக் குடிகாரன்

“ஏங்க வயசானம்மா நிக்கிறாங்க. யாராவதுஅவங்களுக்கு இடம் கொடுங்க” என்று அமர்ந்திருந்தவர்களை அனாவசியமாக வம்பு இழுத்தான் அந்த அரைக்குடிகாரன். அவன் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து

“ஏங்க இந்த பெரியம்மா நின்னுகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு இடம் கொடுங்க” என்று சொல்ல ,அந்தப் பெண் செய்வதறியாது எழுந்தாள்.

” பரவாயில்லம்மா நீ உட்காரு ” என்று அந்த வயதான பெண்மணி சொல்ல

” இல்ல நீங்க உட்காருங்க” என்று அந்தப் பெண் இடம் கொடுத்தாள். ஏதோ தான் பெரிய சேவை செய்தது போல, தன் தலையை தூக்கி அங்கும் எங்கும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த அரைக் குடிகாரன்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சங்கர் நண்பர்களிடம் பேசினான்

“பாத்தியா பொம்பளைகிட்ட எவ்வளவு பிலிம் காட்டிட்டு இருக்கான்னு இப்ப பார்” என்ற சங்கர்

அந்த அரைக் குடிகாரனிடம் வந்தான்

“வணக்கம் ” என்றதும் பதிலுக்கு வணக்கம் சொன்னான் அந்த அரைக்குடிகாரன்

“தெளிவாத்தான் இருக்கான் ” என்று நினைத்த சங்கர்

” இப்போ நின்னுகிட்டு இருக்குற அந்த அம்மாவுக்கு இடம் கொடுத்துட்டீங்க. அவங்க நல்லா தான் இருக்காங்க. நிச்சயமா அவங்களால நின்னுட்டு பயணம் செஞ்சு, அவங்க இடத்துக்கு போய் சேர முடியும் .அவங்களுக்கு உங்களுடைய அக்கறையால் இடம் வாங்கி கொடுத்துட்டீங்க நல்லது. ஆனா இன்னொரு விஷயமும் நீங்க செய்யணும்” என்று அந்த அரைக்குடிகாரனிடம் சங்கர் பேசியபோது, அவன் திரு திரு என விழித்தான்.

” அங்க பார்த்தீங்களா” என்று சங்கர் காட்ட, பேருந்து நடுவில் நின்று கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்தான் அரைக் குடிகாரன்.

“அவருக்குக் கையில் பெரிய கட்டு இருக்கு. அவரால நிக்க முடியல . அவருக்கு இடம் தர மாட்டேங்குறான்ங்க. உங்களால ஒரு இடம் வாங்கி தர முடியுமா? என்று சங்கர் கேட்டபோது

அக்கம் பக்க விழித்தான் அந்த அரைக் குடிகாரன்.கையில் பெரிய மாக்கெட்டு போட்ட அந்த மனிதன் ஒரு கையை மேலே கம்பியை பிடித்துக் கொண்டு, இன்னொரு கையைப் பிடிக்க முடியாமல், அதை தூக்க முடியாமல் அவஸ்தை பட்டு நின்று கொண்டிருந்தார்

பாத்தீங்களா ?இதுதான் இங்க மனுஷங்க , பெண்களுக்கு இரக்கம் காட்டறது மாதிரி, ஆம்பளைங்களுக்கு யாரும் எந்த இரக்கமும் காட்டுறதில்ல. எந்த ஈவும் காற்றதில்ல. சரி அது போகட்டும் .கால், கை சரியில்லாத ஆம்பளைங்களுக்காவது ஏதாவது இரக்கம் காட்டி இடம் கொடுப்பாங்கன்னா அதுவும் இல்ல. இப்போ நம்ம கண் முன்னா ஒருத்தன் கையில பெரிய மா கட்டு போட்டு நிற்கிறார். அவருக்கு இடம் கொடுக்கல. இந்த பெண்மணிக்கு நீங்க வக்காலத்து வாங்கி இடம் வாங்கி கொடுத்தது மாதிரி கையில் கட்டு போட்ட அந்த மனுஷனுக்கு இடம் வாங்கி கொடுக்கவும் அங்கு யாரும் இல்லை .இதுதான் இங்க இருக்கக்கூடிய மனிதர்களின் இரக்கம் “

என்று சொல்லிய சங்கர் நடந்து சென்ற போது, அவர் அருகில் இருந்த ஒருவர் இருக்கையை விட்டு எழுந்தார் .

சங்கர் அமராமல் கையில் கட்டு போட்ட அந்த நபரை அழைத்தான்.

” சார் இங்க வாங்க இதுல உட்காருங்க” என்ற போது

அந்த கையை தூக்கிக் கொண்டு வந்த அந்த மனிதன் சங்கர் காட்டிய சீட்டில் அமர்ந்தார் .இதுதாங்க உண்மையான அக்கறை, சேவை என்று அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் சொல்ல, அந்தக் அரை குடிகாரனுக்கு இப்போது முழுதும் தெளிந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *