செய்திகள்

அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற பெண் போலீசாருக்கு பதக்கம்

Makkal Kural Official

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை, ஜூன் 18–-

அகில இந்திய அளவிலான பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற பெண் போலீசாருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்.

தமிழ்நாடு போலீஸ்துறையில் மகளிர் போலீசாரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அகில இந்திய அளவிலான பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 15-ந் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் 16-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண் போலீசார், மத்திய காவல் அமைப்பினர் என 30 அணிகளை சேர்ந்த சுமார் 453 துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று நடைபெற்ற போட்டிகளை நேரில் பார்வையிட்டு வெற்றி பெற்ற பெண் போலீசாருக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு போலீஸ்துறையில் மகளிர் போலீசாரின் 50 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி இந்திய அளவில் பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியை தொடங்கினோம். முதல் முறையாக பெண் போலீசாருக்கு மட்டுமான போட்டியாக நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இறுதி நிகழ்ச்சி 20-ந் தேதி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பிக்க இருக்கிறார். மொத்தம் 30 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் 2 அணிகள் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

16-ம் தேதி நடைபெற்ற போட்டியில் கைத்துப்பாக்கி சுடும் ஸ்குவாட்டிங் போட்டியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் பாராமிலா முதல்இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை உதவிஆய்வாளர் துர்கா 2-வது இடத்தையும், அசாம் காவல்துறை வீராங்கனை காவலர் இட்டு புயான் 3-வது இடத்தையும் பிடித்தனர். அதேபோல், ரைபிள் சுடும் 100 கஜம் ஸ்டான்டிங் போட்டியில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை வீராங்கனை வெர்சா ரவாத்முதல் இடத்தையும், குஜராத் காவல்துறை வீராங்கனை நிமிஷாபென் கே ராவாலியா 2-வது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமைக் காவலர் ராதிகா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

மேலும், கைத்துப்பாக்கி சுடும் 25 கஜம் குயிக் ரிஃப்ளெக்ஸ் போட்டியில், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் பாராமிலா முதல் இடத்தையும், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் மீனாக்ஷி சந்தர் 2-வது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமைக் காவலர் க.பாரதி 3-வது இடத்தையும் பிடித்தனர். 50 கஜம் ஸ்னாப் ஷூட்டிங் போட்டியில் தமிழ்நாடு போலீஸ் வீராங்கனை பாரதி 3-ம் இடத்தை பிடித்தார். ரைபிள் சுடும் போட்டி பிரிவு – 4ல், தமிழ்நாடு போலீஸ் வீராங்கனை சோனியா 2-ம் இடம் பிடித்தார். கார்பைன் சுடும் போட்டி பிரிவு 1-ல் தமிழ்நாடு போலீஸ் வீராங்கனை சுசி 2-ம் இடம், கீதா 3-ம் இடத்தை பிடித்தனர்.

தொடர்ந்து ரைபிள் சுடும் 200 கஜம் நீலிங் போட்டியில், அசாம்ரைப்பிள்ஸ் வீராங்கனை காவலர்மட்டா வதி சாந்தி பால் முதல்இடத்தையும், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் சுனிதா 2-வது இடத்தையும், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை வீராங்கனை நிர்மலா தாரகி 3-வது இடத்தையும் பிடித்தனர். நேற்று நடைபெற்ற கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் கஜன் ரன் அண்டு ஷூட் போட்டி பிரிவு – 3ல் தமிழ்நாடு போலீஸ் துறை வீராங்கனை பாரதி முதல் இடத்தையும், சப்-இன்ஸ்பெக்டர் சுதா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

தாம்பரம் சப்–இன்ஸ்பெக்டர்

துர்கா 2வது இடம்

16-ந் தேதி நடந்த போட்டியில் 2-வது இடம் பிடித்த தமிழக போலீஸ் வீராங்கனை துர்கா கூறுகையில், ‘தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறேன். அகில இந்திய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண் போலீசார் கலந்துகொள்ள வேண்டுமென்றால் ஆண்களுக்கு இணையாக போட்டியிட வேண்டிய நிலை இருந்தது. அதில், பெண் போலீசாருக்கு குறைவான அளவிலேயே வெற்றி வாய்ப்பு இருந்தது. பெண் போலீசாருக்கு மட்டும் தனியாக போட்டி நடத்துவதன் மூலம் ஏராளமான துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் உருவாவார்கள். எண்ணை போன்ற பெண் போலீசாருக்கு இது மிகவும் முக்கியமானது’ என்றார்.

விழாவில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், ஏடிஜிபி ஜெயராம், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி, ஏடிஜிபி சந்தீப் மிட்டல், வடக்கு மண்டலம் ஐஜிநரேந்திரன் நாயர், ஐஜி (பொது) – செந்தில் குமார், ஐஜி (ஆபரேஷன்) – ஜெயஸ்ரீ உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *