புதுடெல்லி, நவ. 2
ராகுல் காந்தி அகல் விளக்கு செய்யும் குடும்பம் ஒன்றைச் சந்தித்தார். பின்னர் அவர்களோடு சேர்ந்து தான் செய்த அகல் விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரிக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
குறிப்பாக விவசாயிகள், செருப்பு தைப்பவர், லாரி-–பஸ் டிரைவர்கள், முடி திருத்துவோர் என பல்வேறு வகையிலான தொழிலாளர்களை அவர் அடிக்கடி சந்தித்து அவர்களது பணிகளையும் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.
அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு தனது தாய் சோனியாவின் வீட்டில் பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டர்களுடன் அவர் கலந்துரையாடினார். தனது சகோதரி பிரியங்காவின் மகன் ரெய்கானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பெயிண்டர்களுடன்
கலந்துரையாடல்
அப்போது அந்த பெயிண்டர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் ரெய்கானும் பெயிண்ட் அடித்தனர். மேலும் அந்த தொழிலாளர்களின் வருவாய் மற்றும் பணி நிலவரம் குறித்துக் கேட்டறிந்த ராகுல் காந்தி அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.
இதைப்போல தீபாவளிக்கான அகல் விளக்குகளை செய்யும் குயவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு அந்த பெண் மற்றும் அவரது 5 மகள்களுடன் சேர்ந்து அகல் விளக்குகளை செய்தார்.
பின்னர் தான் செய்த அகல் விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரிக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
தீபாவளி என்றால் வறுமை மற்றும் ஆதரவற்ற நிலை எனும் இருளை அகற்றும் ஒளி என்று பொருள். இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்கள் மற்றும் குயவர் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடினேன்.
அந்த வகையில் விசேஷசமான நபர்களுடனான மறக்க முடியாத தீபாவளி இது.நான் அவர்களின் வேலையை நெருக்கமாக பார்த்தேன். அவர்களின் திறமைகளைக் கற்றுக்கொள்ள முயற்சித்தேன் மற்றும் அவர்களின் சிரமங்களையும், சிக்கல்களையும் புரிந்து கொண்டேன்.
அவர்கள் வீட்டுக்கு செல்லவில்லை. நாம் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். அவர்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க, தங்கள் கிராமம், நகரம், குடும்பத்தை மறந்து விடுகிறார்கள்.
அவர்கள் களிமண்ணில் இருந்து மகிழ்ச்சியை உருவாக்குகிறார்கள். பிறருடைய பண்டிகைகளுக்காக ஒளியேற்றும் போது, அவர்களால் ஒளியில் வாழ முடியுமா? வீடு கட்டுபவர்கள் தங்கள் சொந்த வீடுகளை நடத்துவது கடினமானது. மக்களின் திறமைகளுக்கு உரிய மரியாதையும் பங்களிப்புக்கு மதிப்பும் வழங்கும் ஒரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதுவே ஒவ்வொருவரின் தீபாவளியையும் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றும்.
இந்தத் தீபாவளி உங்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பு, முன்னேற்றம் மற்றும் அன்பைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.