சிறுகதை

அகந்தை – எம் பாலகிருஷ்ணன்

லோகநாதன் கல்லூரி படிப்பை முடித்துதான். சொந்தக் கிராமத்திற்கு இன்று செல்கிறான். அவனை வரவேற்க அம்மா அப்பா மற்றும் அண்ணன் அக்கா உற்றார் உறவினர்கள் மாமா மைத்துனர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

லோகநாதன் எம்.எஸ்.ஸி முடித்து விட்டான். வெளியூரில் சிறு வயதில் இருந்து ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தவன் இன்று பிறந்த ஊருக்கு புறப்பட்டு வருகிறான். அவனுடைய பெற்றோர் விவசாய வேலை பார்ப்பவர்கள். அவனை நல்லமுறையில் படிக்க வைக்க விரும்பினர். லோகநாதனும் படிப்பில் அளப்பரிய ஆர்வமிருந்ததால் அவனை அவனது தாய் தந்தையர் வெளியூரில் டவுனில் படிக்க வைத்தனர்.

லோகநாதனும் குடும்பத்தில் முதல் நிலை பட்டதாரியாவான். அவனது குடும்பத்தில் வேறு யாரும் கல்லூரி வரை படிக்க வில்லை. இவன் மட்டும் கல்லூரி படிப்பை முடித்து விட்டான்.

பெற்றோருக்கும் அந்தக் கிராமத்திற்கும் பெருமையாக இருந்தது. லோகநாதன் கிராமத்தில் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்ததால் அவனும் பொறுப்பாக படிப்பை முடித்து விட்டான்.

ஆனால் லோகநாதன் பிறந்தது கிராமமாய் இருந்தாலும் படித்தது பட்டணமானதால் கிராமத்து பழக்க வழக்கத்தை அடியோடு மறந்து விட்டான். அவன் சிறுவயதிலே படிக்கச் சென்றதால் அவனுடைய உறவினர்களின் பெயரைக்கூட மறந்து விட்டான். அது மட்டுமா அவனுடைய இளமைக்கால நண்பர்களையும் மறந்துவிட்டான்.

இன்று தன்னுடைய கிராமத்திற்கு வந்தாலும் எதோ புதிய ஊருக்கு வந்தவன் போல் வருகிறான். அவனுடைய அப்பா அம்மா அண்ணன் அக்கா மாமன் மைத்துனன் இவர்களை மட்டும் நினைவில் வைத்திருந்தான். ஆனால் சொந்த பந்தங்களை சுத்தமாக மறந்து விட்டான்.

இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டும். கிராமத்தில் தாம் மட்டும் தான் படித்தவன் என்ற அகந்தையும் அவனுடன் ஒட்டிக் கொண்டது. இன்று பஸ்ஸை விட்டு தன் கிராமத்தில் இறங்கினான். இறங்கும் போதே மனதில் மகிழ்ச்சி படர்ந்திருந்தாலும் கூடவே சிறுது அலட்சியப் பார்வையுடன் இறங்கினான்.

அவனது நடையில் கெத்தும் தெனா வெட்டும் தலைக்கணமும் கலந்து காணப்பட்டது. அந்தக் கிராமம் சற்று மாற்றத்துடன் தெரிந்தது அவனுக்கு.

விளைச்சல் நிலமாய் இருந்த பாதி இடங்கள் இன்று கட்டான்தரைகளாய் காணப்பட்டன. பசுமை பூத்து பார்வைக்கு குளிர்ச்சியாக இருந்த மரங்களைக் காணோம். புல் செடிகளை மேய்ந்த ஆடு மாடுகளைக் காணோம். குடிசை வீடுகளாய் குழுமியிருந்ததைக் காணோம். அதற்கு பதிலாக அங்கு கட்டிட வீடுகளாக காணப்பட்டன. லோகநாதனுக்கு ஒரே வியப்பு இந்த பத்து வருடங்களுக்குள் என்ன மாற்றம் என்று மனதில் நினைத்தவனாய் அவன் வீட்டுக்கு அந்தக் கிராமத்து பாதையில் நடந்து வந்தான்.

அப்பொழுது தெருவில் நுழையும் இடத்தில் ஒரு டீக்கடை இருந்தது. அடடா நாம சின்ன வயசிலே இருக்கும் போது இருந்த டீக்கடை அல்லவா இது? சற்று மராமத்து வேலைகளுடன் சின்ன மாற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் அந்த டீக்கடையில் பழைய தாத்தா இருந்தாரே, இப்ப வேற யாரோ இருக்கிறாங்க. அண்ணே இந்த டீக்கடையில் பத்து வருசத்துக்கு முன்னாடி ஒரு தாத்தா இருந்தாரு இப்ப நீங்க இருக்கிறீங்க? அவரு எங்கே? என்று அந்த டீக்கடையில் கேட்டான். அதற்கு கடையில் இருந்தவர், அவரு இறந்து ஐந்து வருசமாச்சி நான் அவரோட பேரன் தான். சரி நீ யாருப்பா எனக் கேட்டார்.

நான் அம்மாசி ஆராயி இவங்களோட பிள்ளை லோகநாதன் என்று பதில் சொன்னான்.

ஓ நீ அம்மாசி மகனா. நீ தான் சின்ன வயசுல டவுனுக்கு படிக்க போனாயா. சரி சரி வாப்பா நல்லாயிருக்கீயா.

இருக்கேன்ண்ணே. காலேஜ் படிப்பை முடிச்சிட்டேன் படிப்பை முடிச்ச உடனே ஊருக்கு வந்துட்டேன். ரெம்ப சந்தோசம்பா. சரி உங்க வீடு தெரியுமா என‌ டீக்கடைக்காரர் கேட்க.

எனக்கு இந்த பத்து வருசத்துல எல்லாமே மறந்து போச்சி. நீங்க வந்து எங்க வீட்டை காண்பிக்கீறிங்களா என்று லோகநாதன் கேட்டான்.

அதற்கு அந்த டீக்கடைக்காரர் சரி நான் வந்து உங்க வீட்டை காட்டுறேன் என்று கூறியபடி அவருடைய மனைவியை டீக்கடையை பார்க்க சொல்லி விட்டு அவர் லோக நாதனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

லோகநாதனின் பெற்றோர் வீடு இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமிருக்கும். லோகநாதனும் டீக்கடைக்காரரும் பேசிக் கொண்டே நடந்தனர். இடையில் தென்னந் தோப்புகளும் வாழைத் தோப்புகளும் இருந்தன. அதன் பக்கத்தில் பழைய கிணறு ஓன்று இருந்தது. அந்தக் கிணற்று பக்கத்தில் நடந்து சென்றனர்.

பிறகு அந்த டீக்கடைக்காரர் லோகநாதனிடம் பேச்சு கொடுத்தார். ஏம்பா தம்பி பட்டணத்துக்கு போய் என்ன படிப்பு படிச்சிருக்கே எனக் கேட்டார்.

அதற்கு லோகநாதன் அதை சொன்னா உங்களுக்கு புரியுமா எம்எஸ்சி படிப்பு படிச்சிருக்கேன்.

ஓ அப்படியா. எம்எஸ்சி ன்னா எத்தனையாவது படிப்பு தம்பி. அதை கேட்டதும் லோகநாதனுக்கு தலைக்கணம் எட்டி பார்த்தது.

படிப்பை சொன்னா உங்களுக்கு புரியாது. உங்கள் மாதிரி படிக்காதவங்களுக்கு சொன்னா விளங்காது. பேசாம வாங்க என்று அதட்டலான குரலில் பேசினான் லோக நாதன். இதை சற்றும் எதிர்பார்க்காத டீக்கடைக்காரர் வாயடைத்து போய் விட்டார்.

இருவரும் சிறுது நேரம் மௌனமாக நடந்து வந்தனர். பழைய பாழடைந்த கிணற்றுப் பக்கம் வந்து கொண்டிருந்தனர்.

லோகநாதன் படிப்பின் செருக்குத்தனத்துடன் நடந்து வந்தான். இந்த கிராமத்திலிருந்து நல்ல வேளை நாம் படிக்க டவுனுக்கு போய் படிச்சது. இல்லையின்னா நாமும் இவங்கள மாதிரி படிக்காத முட்டாளா இருந்திருப்போம் என்று மனதில் நினைத்தவனாய் டீக்கடைக்காரர் பின்னே நடந்துபோனான்.

தம்பி பாத்து வா. இது பழைய கிணறு தள்ளியே வா என்று லோகநாதனை எச்சரித்தவாறு முன்னே நடக்கலானார். அண்ணே நீங்க பாத்து போங்க. எனக்கும் பொது அறிவு இருக்கு. நானும் இந்த ஊர்க்காரன் தான் என்று பதில் சொல்லிக் கொண்டு அவன் நடக்க டீக்கடைக்காரர் கிணற்றை கடந்து செல்ல லோகநாதன் கிணற்றைக் கடந்து செல்லும் போது அந்தோ பரிதாபம்– கிணற்றருகில் லோகநாதன் நடக்க திடீரென்று ஈரமான மண் சறுக்கி வழுக்கி கிணற்றுக்குள் குப்புற விழுந்து விட்டான்.

அய்யோ என்று அலறல் சத்தம் கேட்டு டீக்கடைக்காரர் திரும்பி பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தார்.

கிணற்றுக்குள் விழுந்த லோகநாதன் அண்ணே காப்பாத்துங்க என்று அபயக்குரல் கொடுத்து கத்தினான். உடனே டீக்கடைக்காரர் என்னப்பா நான் தான் சொன்னேனே கிணத்து பக்கம் பாத்து வான்னு சொன்னேன். சரி சரி நீ நீந்தி மேலே வாப்பா என்று சொல்ல

லோகநாதனும் அய்யோ அண்ணே எனக்கு நீச்சல் தெரியாதே என்று கத்தினான்.

என்னப்பா உனக்கு நீச்சல் தெரியாதா. நீச்சல் தெரியும்ன்னு நான் நினைச்சிட்டேன். எனக்கு உண்மையிலே நீச்சல் தெரியாது என்னை காப்பாத்துங்க என்று மறுபடியும் கத்தினான்.

கிணற்றில் உயிருக்கு போராடி தத்தளிப்பதை பார்த்த டீக்கடைக்காரர் ஒரு கணமும் தாமதிக்காமல் அவர் அவனைக் காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.

அவர் குதித்ததும் உள்ளே தத்தளித்த லோகநாதன் அவரை இறுக பிடித்துக் கொண்டான். பிறகு ஒரு வழியாக டீக்கடைக்காரர் நீந்தி லோகநாதனை மேலே கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றினார்.

கிணற்றில் விழுந்த லோக நாதன் மூச்சிரைக்க பேசினான். அண்ணே ரெம்ப நன்றி. நீங்க மட்டும் என்னை காப்பாத்தலைனா நினைச்சி பார்த்தாலே பயமா இருக்கு.

நான் ரெம்ப படிச்ச தலைக்கணத்துல எல்லாம் நமக்கு தெரியும்னு கர்வத்துல இருந்துட்டேன்.

அதோட மத்தவங்கள மட்டமா நினைச்சி கிட்டு இருந்துட்டேன். யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லைனு புரிஞ்சி கிட்டேன். அதோட எல்லாம் தெரிஞ்சவங்க யாரும் இல்லைன்னு தெரிஞ்சி கிட்டேன் படிச்சா மட்டும் எல்லாம் தெரிஞ்சிடாது.

இங்கே எல்லோரும் திறமையானவங்க தான்னு புரிஞ்சி கிட்டேன். நான் என்ன தான் படிச்சிருந்தாலும்

வாழ்க்கைக்கு தேவையான நீச்சல் தெரியாம போச்சி. இனிமே நான் யாரையும் இழிவாக நினைக்க மாட்டேன் என்று மனமுருக லோகநாதன் பேசினான்.

உடனே டீக்கடைக்காரர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

லோகநாதன் அகந்தை அழிந்தது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *