செய்திகள் நாடும் நடப்பும் வர்த்தகம்

ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் உயர் அலுவலர்களை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்

Makkal Kural Official

சிகாகோ, செப்.11

ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10–ந் தேதி) அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பான ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது. தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்த்திட துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7,016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று சிகாகோவில் ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அதன் விவரங்கள் வருமாறு:

ஃபோர்டு மோட்டார் நிறுவனம்

ஃபோர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் இரண்டாவது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டியர்பார்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ஃபோர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது,

ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பு நிகழ்வில், ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் கே.ஹார்ட், துணைத் தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) மேத்யூ கோட்லெவ்ஸ்கி, ஃபோர்டு இந்தியா இயக்குநர் டாக்டர் ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஐடிசர்வ் கூட்டமைப்பு

ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்டரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது மற்றும் CSR மற்றும் STEM முயற்சிகள் மூலம் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துகிறது. ஐடிசர்வ் கூட்டமைப்பு உயர்திறமை பணியாளர்களின் குடியேற்றத்திற்கு சட்ட உதவிகளை புரிகிறது.

ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர் ஐடிசர்வ் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஜெகதீஸ் மொசாலி, இயக்குநர்கள் சிவ மூப்பனார், சம்ப மொவ்வா, சிகாகோ பிரிவு தலைவர் சதீஷ் யலமஞ்சிலி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் திறன்மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாயப்பு அளித்திட தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *