சிறுகதை

ஃபுட் டெலிவரி – ராஜா செல்லமுத்து

மணி பதினொன்றைக் கடந்து நின்றது.

தாமோதரன் ஒரு ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தோசை ,ஆம்லெட் என்ற ஆர்டரை கொடுத்து விட்டு தன் மொபைல் ஃபோனை எடுத்து எதையோ ஆராய ஆரம்பித்தான். சாப்பிட தோசை ,ஆம்லெட் வந்தது.

இத்தனைக்கும் அவன் முகம் கொஞ்சம் கூட வாடாமல் இருந்தது. அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன் மொபைல் போனில் வீடியோக்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாய் இருந்தான்

தாமோதரனை எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த செல்வம் உற்றுப் பார்த்தான். அவன் அணிந்திருந்த டி ஷர்ட் ஃபுட் டெலிவரி என்று டைப் செய்திருந்தது. அதைக் கவனித்து செல்வத்திற்கு அவனைப் பார்த்ததும் ஒரு பக்கம் பரிதாபமாகவும் இன்னொரு பக்கம் பாவமாகவும் இருந்தது

கேட்கலாமா? வேண்டாமா? என்று நினைத்தான் செல்வம். கேட்டால் ஏதும் தவறாக நினைத்து விடுவானோ? என்று மனதிற்குள் வைத்துக் கொண்டு ஏற்கனவே அவன் ஆர்டர் செய்த உணவு வந்திருந்தாலும் அதை உண்ணாமல் தாமோதரனைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

தாமோதரன் இதையெல்லாம் கவனிக்காமல் தன் செல்போனைப் பார்ப்பதும் சிரிப்பதுமாய் இருந்தான்.

அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்த சர்வர் செல்வம் சாப்பிடாததை கவனித்து

சார் வேற எதுவும் வேணுமா? ஏன் சாப்பிடாம இருக்கீங்க? என்று கேட்டபோது

இல்ல எனக்கு எதுவும் வேண்டாம் என்று சன்னமாகச் சொல்லிவிட்டு தாமோதரனை உற்று கவனித்துக் கொண்டிருந்தான்.

மொபைல் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த தாமோதரன் லேசாகத் திரும்பி செல்வத்தைப் பார்த்து விட்டு மறுபடியும் செல்போனில் மூழ்கினான்.

செல்வத்திற்கு தாமோதரனை நன்றாகக் தெரிந்தது. ஆனால் கேட்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

அவன் சாப்பிடாமல் இருந்ததைப் பார்த்த தாமோதரன்

என்ன சார் ஏன் சாப்பிடாம இருக்கீங்க ?எதுவும் வேணுமா? என்று கேட்டான்.

இல்லைஎன்ற தலையை ஆட்டிய செல்வம் மதியம் நீங்க ராயப்பேட்டையில் இருக்கிற ஒரு குளோபல் ஆபீஸ்க்கு பிரியாணி ஆர்டர் எடுத்துட்டு வந்தீங்களா? என்று கேட்டபோது

கொஞ்ச நேரம் யோசித்த தாமோதரன்

Yes sir அந்த எட்டாவது மாடி பில்டிங் தானே ? என்றான்.

மதியம் நான் தான் அந்த பிரியாணி ஆர்டர் பண்ணி இருந்தேன். நீங்க தான் கொண்டு வந்து கொடுத்தீங்க. நான் அப்போ உங்களையும் நீங்க போட்டிருந்த டீ சர்டையும் கவனிச்சேன். என்ன நீங்க மறந்து இருக்கலாம் .ஆனா உங்க முகம் எனக்கு மறக்கல என்று செல்வம் சொன்னபோது

என்ன சார் தினந்தோறும் நூத்துக்கணக்கான மக்களை சந்திக்கிறோம். பார்க்கிறோம் மனசுல வச்சுக்கணும்னு ஆசைதான். நினைவில நிக்க மாட்டேங்குது சார். எப்படி சார் இருந்தது பிரியாணி? என்று கேட்டான் தாமாேதரன்.

இத்தனை பேருக்கும் உணவு கொடுத்துட்டு வெறும் வயித்தோட உட்கார்ந்து வேறு ஒரு ஓட்டல்ல உணவு சாப்பிடும் தாமோதரனை பார்த்த போது செல்வத்திற்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. .அதை அவன் வெளிக் காட்டவில்லை.

தாமோதரன் ஆர்டர் செய்யப்பட்ட உணவு அவனுக்கு கொஞ்சம் தாமதமாக வந்தது .இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

முன்னால் சாப்பிட்ட செல்வம் தாமோதரனுக்கும் சேர்த்து பில் கொடுத்தான்.

சார் வேண்டாம் சார் ,என்னுடைய பில்ல நான் கொடுத்துடறேன் சார் ப்ளீஸ் என்றான் தாமோதரன்.

இல்ல நீங்க சாப்பிடுங்க. இன்னும் ஏதாவது வேணுமா? என்று கேட்டான் செல்வம்.

இல்ல சார். இது போதும் என்று தாமோதரன் சொல்ல இருவருக்கும் சேர்த்து பில்லைக் கொடுத்துவிட்டு ஓகே பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டு அந்த உணவு விடுதியை விட்டு வெளியேறினான் செல்வம்

இப்போதுதான் செல்வத்திற்கு அந்த நெருடல் அவனை விட்டுப் போயிருந்தது .

தாமோதரன் மதிய உணவு டெலிவரி கொடுத்த பாேது அவனுக்கு டிப்ஸ் கொடுக்கலாம் என்று செல்வம் 50 ரூபாய் கொடுத்தான்.

சார் இதெல்லாம் எதுக்கு சார் எனக்கு சம்பளம் தராங்க. வேலை பாக்கிறேன். எனக்கு இதெல்லாம் வேண்டாம் சார். உங்க கரிசனைக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிச் சென்ற தாமோதரன் முகம் அவன் நினைவில் வந்தது.

எட்டு மாடி ஏறி வந்திருக்கான் ஏதாவது கொடுக்கணுமே? ஆனா இவன் வேணாம்னு சாெல்றானே என்று நினைத்த செல்வத்தின் நினைப்பு இப்போது அவைன் மனதில் வந்து போனது..

தாமோதரனுக்கு உணவு வாங்கி கொடுத்த திருப்தியில் அந்த டிப்ஸ் கழிந்து போனதாக நினைத்து வீட்டிற்கு நடையைக் கட்டினான் செல்வம்

இப்படிப்பட்ட நல்ல மனுஷனும் இந்த பூமியில இருக்கத்தான் செய்கிறாங்க என நினைத்த தாமோதரன் ஃபுட் டெலிவரி என்று பிரிண்ட் செய்யப்பட்டிருந்த அந்த டீசர்ட்ரோடு தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி தன் வீடு நோக்கிப் பறந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *