‘மைனஸ் 9 டிகிரி குளிரில் துடித்துப்போன சயீஷா; உதடுகள் நீல நிறமானது’

சென்னை, ஜூன். 14–

‘ஜுங்கா’ படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது நாயகி சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் திரும்பவும் படபிடிப்பு தளத்திற்கே வந்தது. இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன் என்றார். இதை என்னால் மறக்க முடியாது’ என்று நெகிழ்ந்து போய் சொன்னார் ஹீரோ விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி புரொடக்ஷன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில், நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி இசைத்தட்டை வெளியிட, படக் குழுவினரும், வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக்கொண்டனர். விழாவின் தொடக்கத்தில் ‘லோலிக்ரியா..’எனத் தொடங்கும் பாடலுக்கு சிறுவர்களும், சிறுமிகளும் மேடையில் நடனமாடினர். படத்தின் டிரைலர் மற்றும் நான்கு பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன.

பின்னர் விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா. கா. பா. ஆனந்த், நடிகை பிரியங்கா என இருவரும் படக் குழுவினரை மேடையில் ஏற்றி, ஜுங்காவில் பணியாற்றிய அனுபவங்களை கேள்வியாக கேட்க, அதில் பணியாற்றியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் யுவராஜ் வரவேற்றார்.

தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பேசும் போது, ‘நடிகர் விஜய்சேதுபதி எதையும் எதிர்பார்க்காதவர். இவரை போன்ற ஒரு மனிதரை என்னுடைய 40 ஆண்டு கால திரையுலக பயணத்தில் கண்டதில்லை. படத்தைப் பற்றி இயக்குநர் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவான படம்.’ என்றார்.