860 அங்கன்வாடி மையங்களை சீர் செய்ய ரூ.17 கோடி நிதி

சென்னை, ஜூன் 13–

இந்த ஆண்டு 860 அங்கன்வாடி மையங்களை பழுது நீக்கி சீர் செய்ய 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டசபை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

1. ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க தமிழ்நாடு அரசால் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், 1986ம் ஆண்டிலிருந்து மாநகராட்சி கட்டடத்தில் இயங்கி வருகின்றது. தற்போது இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு புதிய கட்டடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக் குழு அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சி கூடம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

2. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்று 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

3. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 46 ஆயிரத்து 397 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 860 அங்கன்வாடி மையக் கட்டடங்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய வகையிலான பழுதுகளை நீக்கி, சீர்படுத்துவதற்காக தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 17 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்பூதியம் உயர்வு

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளரச் செய்யவும், சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அம்மாவின் வழியில் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக,

1. மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத் திறன் மற்றும் செவித் திறன் குறையுடையோருக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1,129 சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றிற்கு 5 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2. மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பொருள் விற்பனை மையம் அமைக்க, அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்பு நிதி 25,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். முதற்கட்டமாக, 100 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

3. மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் 301 சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்கள் மூலம் 11 ஆயிரத்து 948 மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுகின்றனர். அவர்களுக்கு தற்போது மாதமொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியம் 650 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே 15 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளுக்கு அமைச்சர் சரோஜா நன்றி தெரிவித்தார்.