17 ந்தேதி 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரியகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா

மேட்டுப்பாளையம், ஜூன் 13–

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள, மூடுதுறை கிராமம், பெரியகுமாரபாளையம் பிரிவில், அம்மன் கோயில் தோட்டத்தில், 1300 ஆண்டு பழமை வாய்ந்த, எட்டுக்கரங்களுடன் சோட்டானிக்கரை அம்மனின் அம்சத்துடன், சுயம்புவாக அவதாரம் எடுத்து, இப்பகுதி மக்களுக்கு, அருள்பாலித்து வருகிறார்.

கரியகாளியம்மன் கோயில், பலநூறு ஆண்டுகளுக்கு பிறகு, மீனம்பாளையம், பெரியகுமாரபாளையம், எம்.கவுண்டம்பாளையம், சின்னகுமாரபாளையம், காட்டுப்பாளையம், கலியாம்பாளையம், பழையூர் ஆகிய 7 கிராம மக்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்களின் பெருமுயற்சியினால், ஆகம சாஸ்திரப்படி, கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், மூன்று நிலை கோபுரம் மற்றும் குறிஞ்சி மண்டபம் ஆகிய திருப்பணிகள், சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஜூன் 17 ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தலைமையில், ஸ்ரீ ஓதிமலை ஆண்டவர் கோயில் ஷண்முக சுப்ரமணிய குருக்கள், கணபதிராஜ சிவாச்சாரியார், கூனம்பட்டி திருமடம் கிரிவாச சிவம் ஆகியோர், யாக வேள்விகளை நடத்தி, கும்பாபிஷேகம் செய்து வைக்கிறார்கள்.

பின்னர், அன்னதானம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, அம்மன் திருப்பணிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.