வங்காளதேசத்தில் பலத்த மழை, நிலச்சரிவினால் 14 பேர் பலி

வங்காளதேசத்தில் பலத்த மழை,- நிலச்சரிவினால் 14 பேர் பலியானார்கள்.

அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் மியான்மர் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்த தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் பெருத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.

இந்த மழையாலும், நிலச்சரிவாலும் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மழை, நிலச்சரிவுகளில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் ஒரு லட்சம் பேர் அவதியுற்று வருகிற நிலையில் அவர்களை வேறு இடங்களில் குடி அமர்த்துவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைப்பை சேர்ந்த முகமது ஷா கமால் தெரிவித்தார்.மழையை எதிர்பார்த்து ஏற்கனவே 28 ஆயிரம் அகதிகள், பாதுகாப்பான இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.