ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் ‘எம்.ஜி.ஆர். 100’ நெல் ரகத்தை பிரபலப்படுத்த நடவடிக்கை

சென்னை, ஜூன்.13–

ஜெயலலிதாவின் ஆசியுடனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படியும், விவசாயிகளின் பங்கேற்புடன் நடப்பாண்டில் ‘‘எம்.ஜி.ஆர். 100 நெல் ரகம்” ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரபலப்படுத்தப்படும் என்று அமைச்சர் இரா.துரைக்கண்ணு அறிவித்தார்.

மண்ணின் வளத்தினை மேம்படுத்த 50,000 ஏக்கர் பரப்பில் நடப்பாண்டில் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்ய 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் வேளாண்மைத் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இரா.துரைக்கண்ணு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மைத்துறை மூலம் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, இயற்கை வேளாண் மண்டலமாக அறிவித்து, முற்றிலும் ரசாயனமற்ற இயற்கை வேளாண்மையைப் பரவலாக்க நடப்பாண்டில் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தரமான விதைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பத்து மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கு வசதி 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்த நடப்பாண்டில் 6 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவிக்கும்பொருட்டு, நடப்பாண்டில், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து, சாகுபடி செய்து, மாநில அளவில் அதிக மகசூல் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதும், ரொக்கமும் வழங்கப்படும்.

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக, பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பழக்கன்றுகள் பரிசளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், நடப்பாண்டில் தோட்டக்கலைத் துறையின் மூலம் தரமான பழ மரக்கன்றுகளும், இதர கன்றுகளும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்கிட 5 கோடி ரூபாய் செலவிடப்படும்.

விவசாயிகளுக்கு லாபம் தரும் தோட்டக்கலை பயிர்கள் நடப்பாண்டில் 34 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 44,250 ஏக்கரில் பரப்பு விரிவாக்கம் செய்யப்படும்.

வெங்காய சேமிப்புக் கிடங்குகள்

தமிழ்நாட்டில் வெங்காய சாகுபடியை ஊக்குவிக்கவும், குறைந்த செலவில் வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவும், நடப்பாண்டில் 7 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் வீட்டுத் தோட்டங்களில் காய்கறி உற்பத்தி செய்யத் தேவையான காய்கறி விதைத் தளைகளை வழங்க நடப்பாண்டில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் விளைபொருட்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும், விரைவாகவும் உலர்த்தி, மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்க, நடப்பாண்டில் விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு சூரிய கூடார உலர்த்திகள் 2 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும்.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க இளைஞர்களுக்கு வேளாண் யந்திரங்கள், சூரிய சக்தி பம்பு செட்டுகள் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகள் நடப்பாண்டில், ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

கிராமப்புற இளைஞர்களை தோட்டக்கலையில் ஈடுபடுத்தும் வகையில், தோட்டக்கலை அறிவியல் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தோட்டக்கலைத்துறையில் திட்டங்கள் சார்ந்த களப்பணிகள் மேற்கொள்வதற்காகவும், தோட்டக்கலை சார்ந்த வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், நடப்பாண்டில் 500 தொழில் பழகுநர்கள் பயிற்றுவிக்கப்படுவர். இதற்காக, நடப்பாண்டில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு சாகுபடியில் நோயற்ற கன்றுகளை விரைந்து உருவாக்க உதவும் திசுவளர்ப்பு நாற்று சாகுபடி முறையினை பரவலாக்குவதற்காக, நடப்பாண்டில், 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மண்வள அட்டை

மண்வளம் அறிந்து உரமிட உதவும் மண்வள அட்டை அடிப்படையிலான உர விநியோகம் நடப்பாண்டில் 100 வட்டாரங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும்.

விவசாயிகளின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், விவசாய நிலங்களில் உழுவை யந்திரம் கொண்டு வரப்பு செதுக்கி, சேறு பூசும் கருவியின் செயல்விளக்கத்திற்காக, நடப்பாண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நிலக்கடலையில் முளைப்புத் திறன் குறையாமல், விதையினை அதிக நாட்கள் சேமிக்கும் தொழில்நுட்பத்தை, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிப்பதற்காக நடப்பாண்டில், 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பொதுமக்களும், மாணவ, மாணவியர்களும் தோட்டக்கலையில் செயல்படுத்தி வரும் நவீன தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, தங்களது அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில், சோதனை அடிப்படையில், குறிப்பிட்ட பண்ணைகளில் ‘‘பண்ணை சுற்றுலா திட்டம்” நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பான முறையில் கையாளுவதற்காக, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய தளைகள் விநியோகம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சிக்காக, நடப்பாண்டில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பருத்தியில் அதிகரித்து வரும் இளஞ்சிவப்பு காய்ப் புழுக்களின் தாக்குதலினை கட்டுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில், 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சிப் பொறிகள் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் நிதியில் விநியோகிக்கப்படும்.

விவசாயிகளுக்கு அதிக விளைச்சலும், லாபமும் தரும் வண்ணக் குடைமிளகாய் சாகுபடியை பாதுகாக்கப்பட்ட சூழலில் உருவாக்க, நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 லட்சம் சதுர மீட்டரில் பசுமைக்குடில்கள் தொகுப்பு ஏற்படுத்துவதற்காக, 50 சதவீத மானியமாக 9 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தோட்டக்கலைப் பயிர்களை அதிகம் சாகுபடி செய்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்க செயல்பட்டுவரும் தளி தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நடப்பாண்டில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக பாரம்பரிய மலர்களுக்கான புதிய மதிப்புக் கூட்டு மையத்தை அமைப்பதற்காக, நடப்பாண்டில் இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பல்அடுக்கு சேமிப்பு கிடங்கு வசதி

நீலகிரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள மலைவாழ் பழங்குடியின காபி சாகுபடி செய்யும் விவசாயிகளின் தோட்டங்களில் உற்பத்தியை உயர்த்தி, பதப்படுத்தி, வர்த்தகத்தை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நடப்பாண்டில் 2 கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளின் விளைபொருட்கள் அதிக அளவில் பரிவர்த்தனை செய்யப்படும் செஞ்சி மற்றும் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் விளைபொருட்களை சேமிக்க பல்அடுக்கு சேமிப்பு கிடங்கு வசதி நடப்பாண்டில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தித் தரப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் விளைபொருட்களின் துல்லியமான எடையை உறுதி செய்யும் வகையில், முதற்கட்டமாக 500 கிலோ எடைத் திறன் கொண்ட மின்னணு எடை இயந்திரம், 150 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

வேளாண் இயந்திரங்கள் குறித்த விலை, மானியம், பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விவசாயிகள் அறிந்து பயன்பெற, மாநில அளவிலான தகவல் மையம் ஒன்று நடப்பாண்டில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றிய நிலங்களில், மண்வள மேம்பாடு, மாற்றுப் பயிர் சாகுபடி, பண்ணைக் குட்டை நீரைப் பயன்படுத்தி சாகுபடி போன்ற தொழில்நுட்ப செயல்விளக்கத்தினை அமைத்து, வேளாண் பணியினை தீவிரப்படுத்துவதற்காக நடப்பாண்டில் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதிகரித்து வரும் தோட்டக்கலை பட்டயப் படிப்பின் தேவையை கருத்தில்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை தோட்டக்கலை பட்டயப்படிப்பு நிறுவனத்தின் மாணவர்களின் எண்ணிக்கை நடப்புக் கல்வியாண்டு முதல் 40 லிருந்து 80 ஆக உயர்த்தப்படும்.

பயிர் காப்பீட்டுத் திட்ட செயலாக்கத்தைக் கண்காணிக்கவும், களப்பிரச்சினைகளை உடனுக்குடன் களையவும், இத்திட்டத்தின் பலன்கள் நடப்பாண்டிலிருந்து விவசாயிகளை மேலும் விரைவாக சென்றடைவதை உறுதிசெய்யவும் மாநில மற்றும் மாவட்ட அளவில் தனிப்பிரிவுகள் உருவாக்கப்படும்.

376 தொழில்நுட்ப அலுவலர் பணி நியமனம்

விரைவாக விவசாயிகளை சென்றடைவதற்கு, தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள 376 தொழில்நுட்ப அலுவலர்களின் பணியிடங்கள் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.

வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து செயலாக்கவும், கண்காணிக்கவும் வேளாண் துறை அலுவலர்களுக்கு 50 புதிய வாகனங்கள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்.