மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் +2 தேர்வில் சாதனை படைத்தனர்: அமைச்சர் நிலோபர் கபில் பாராட்டு

சென்னை, ஜூன்.13–

சென்னை செனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா தலைமை வகித்தார். குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களில் படித்த 10-ம் மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், சிறப்புப் பயிற்சி மையங்களில் திறம்பட பணியாற்றிய தன்னார்வ கல்வி பயிற்றுனர்களுக்கும், குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு சாதனை புரிந்த இளம் சாதனையாளர்களுக்கும், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய கள அலுவலர்களுக்கும், பரிசுகளும், நினைவு பரிகளும், மேலும் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் அமைச்சர்களால் வழங்கப்பட்டது.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் கூட்டத்தில் பேசியதாவது:-

தமிழகத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி மையங்களில் படித்த 1,08,604 குழந்தைகள் முறையான பள்ளிகளில் இந்நாள்வரை சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் சாதனை மாணவர்களாக திகழ்கின்றனர். பலர் கலைக்கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர். பலர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, அரசின் பல்வேறு துறைகளிலும் மற்றும் தனியார் துறைகளிலும் பணியாற்றுகின்றனர். பலர் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை வளமாக்கிக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில், நெசவுத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட ராமலிங்கம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட மூர்த்தி ஆகிய இருவரும் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.

2017–18ம் கல்வியாண்டில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மீன் சுத்தம் செய்தல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வி. அபிதா என்பவர் 1105 மதிப்பெண்களும், பனியன் கம்பெனியிலிருந்து மீட்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். தரணிதரன் 1093 மதிப்பெண்களும், கைத்தறி தொழிலிலிருந்து மீட்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த டி. கிருத்திகா 1091 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பீடி சுற்றுதல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.இ.கோகுல் 445 மதிப்பெண்களும், மீன் சுத்தம் செய்தல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வி.வர்ஷா 439 மதிப்பெண்களும், சில்வர் பட்டறையிலிருந்து மீட்கப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.உஷா 437 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதை அறிந்து பெருமிதம் அடைகிறேன்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திட விளம்பரங்கள், சுவரொட்டிகள், பொதுக்கூட்டங்கள், மனித சங்கிலி பேரணிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

42–வது அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து தொழிலாளர் ஆணையர் கையொப்பமிட்ட வேண்டுகோள் படிவம் விநியோகிக்கப்பட்டு 32,700 பொதுமக்கள் கையொப்பம் பெறப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 43 மற்றும் 44வது அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து 10 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கையின் கூடுதலாக யூனிசெப் உதவியுடன் நடிகர் விவேக் நடித்த குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான குறும்படம் ‘நானும் பள்ளிக்கூடம் போகனும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படம் திரையரங்குகள், அரசு கேபிள், செய்திதுறை வீடியோ வாகனம் மூலம் அதிகளவில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஒளிபரப்பப்படும்.

இவ்வாறு அமைச்சர் நிலோபர்கபில் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கு.காளியண்ணன் நன்றியுரை வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.